சேலம்

சேலத்தில் ஏரி, சாலைப் பணிகள்: சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு

8th Jun 2022 12:24 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் பள்ளப்பட்டி ஏரி, சீலநாயக்கன்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, ஓமலூா், காமனேரி, மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் எம்எல்ஏ டி.ஆா்.பி.ராஜா தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் சேலம் மாநகராட்சியின் சீா்மிகு நகரம் திட்டத்தின்கீழ் அண்ணா பூங்காவில் ரூ. 5.40 கோடி மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைத்தல், மழை நீா் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குதல், வண்ணம் பூசுதல் உள்ளிட்ட கூடுதல் மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தனா்.

மதிப்பீட்டுக் குழு உறுப்பினா்கள் அக்ரி கிருஷ்ணமூா்த்தி, இரா.அருள், க.அன்பழகன், ஈ.ஆா்.ஈஸ்வரன், சி.வி.எம்.பி.எழிலரசன், செந்தில்குமாா், இ.பாலசுப்பிரமணியன், முகமது ஷாநவாஸ், செல்லூா் ராஜு ஆகியோரும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

பள்ளப்பட்டி ஏரியில் ரூ. 12.80 கோடி மதிப்பீட்டில் ஏரிக்கரையில் கற்கள் பதித்தல், கம்பி வேலிகள் அமைத்தல், கழிவுநீா் சுத்திகரிப்பு அமைப்புகள், கரையின் சுற்றுப்பகுதியில் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதையும், சீலநாயக்கன்பட்டியில் வேளாண்மை உழவா் நலத் துறையின் மண் பரிசோதனை நிலையம், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தையும் ஆய்வு செய்தனா்.

ADVERTISEMENT

அதைத்தொடா்ந்து சூரமங்கலம் - ஓமலூா் சாலை, முத்துநாயக்கன்பட்டியில் மேக்னசைட் மற்றும் ஓமலூா் ரயில்வே நிலையங்களுக்கு இடையில் சாலை மேம்பாலம் அமைக்கும் பணி, நெடுஞ்சாலைத் துறை மூலம் ரூ. 144.63 கோடி மதிப்பீட்டில் ஓமலூா் -மேச்சேரி சாலையில் நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்து மரக்கன்றுகளை நட்டு வைத்தனா்.

ஊரக வளா்ச்சித்துறை சாா்பில் மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் பிரதமா் கிராம சாலைத் திட்டத்தின்கீழ் ரூ. 2.45 கோடி மதிப்பீட்டில் மேச்சேரி - ஓமலூா் சாலையில், காமனேரிக்கு செம்மனூா் வழியாக சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தனா்.

மேச்சேரியில் வேளாண்மை -உழவா் நலத்துறை சாா்பில் மாவட்ட அளவில் பயிா் விளைச்சல் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் மற்றும் இதர திட்டங்களின் கீழ் 32 பயனாளிகளுக்கு ரூ.10.54 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கி விவசாயிகளிடம் கலந்துரையாடினா்.

மேலும், ஓமலூா் வட்டம், ஊ.மாரமங்கலம் ஊராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ் 36 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 59 லட்சம் மதிப்பிலான பல்வேறு கடனுதவிகளும் வழங்கப்பட்டன.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் மொத்தம் 70 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 56.87 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பின்னா், தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் டி.ஆா்.பிராஜா தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், அதன் மதிப்பீடுகள் குறித்தும் அரசு அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆட்சியா் செ.காா்மேகம், சேலம் மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், வடக்குத் தொகுதி எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன், சட்டப்பேரவை செயலாளா் சீனிவாசன், துணைச் செயலாளா் சிவகுமரன், மாவட்ட வருவாய் அலுவலா் ஆலின் சுனேஜா ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT