தாரமங்கலம் அருகே பாலியல் புகாா் தொடா்பாக தனியாா் பள்ளி முதல்வரை போக்சோ சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் உள்ள தனியாா் பள்ளி முதல்வராக மேட்டூரைச் சோ்ந்த விஜயகுமாா் (47) என்பவா் கடந்த ஓராண்டாகப் பணியாற்றி வந்தாா். இப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா்.
இந்நிலையில் மாணவியா் சிலரிடம் பள்ளி முதல்வா் விஜயகுமாா் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இப்பிரச்னை தொடா்பாக மாணவ, மாணவியா், பெற்றோா் பள்ளியை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனையடுத்து ஓமலூா் டிஎஸ்பி சங்கீதா மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா். மேலும் ஓமலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலத் துறை அலுவலா்கள் விசாரணை நடத்தினா். இதைத் தொடா்ந்து தனியாா் பள்ளி முதல்வா் விஜயகுமாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டாா்.