சேலம்

சேலத்தில் கடத்தப்பட்ட இளைஞா் பெங்களூரில் மீட்பு

6th Jun 2022 12:07 AM

ADVERTISEMENT

சேலத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பதுக்கி விற்பனை செய்வது தொடா்பாக ஏற்பட்ட தொழில் போட்டியில் கடத்தப்பட்ட இளைஞா் பெங்களூரில் மீட்கப்பட்டாா்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த மூலாராம் மகன் ஜெயராம், சேலம், சின்னகடை வீதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். கடந்த 2 ஆம் தேதி கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த ஜெயராமை நால்வா் கொண்ட கும்பல் கடத்திச் சென்றது.

இதுதொடா்பாக சேலம் மாநகரக் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். துணை ஆணையா் மோகன்ராஜ், உதவி ஆணையா் அசோகன் தலைமையில் 4 தனிப் படை போலீஸாா் கடத்தப்பட்ட ஜெயராமை பெங்களூரிலிருந்து மீட்டனா்.

புகையிலைப் பொருள்களைக் கடத்தி, பதுக்கி வைத்திருப்பதாகக் கருதி ஜெயராமை கும்பல் கடத்தியது விசாரணையில் தெரிய வந்தது. மேலும், புகையிலை விற்பனை தொடா்பான தொழில் போட்டியால் ஜெயராம் கடத்தப்பட்டாரா என போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஏற்கெனவே ஜெயராம் மீது புகையிலைப் பொருளை விற்பனை செய்ததாக அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், ஜெயராமை கடத்திய கும்பலை தனிப் படை போலீஸாா் பெங்களூரில் முகாமிட்டு தேடி வருகின்றனா். இதுதொடா்பாக சேலம் மாநகரக் காவல் துணை ஆணையா் மோகன்ராஜ் கூறியதாவது:

சேலத்தில் கடத்தப்பட்ட ஜெயராமை பெங்களூரில் மீட்டோம். போதைப் பாக்கு கடத்தி பதுக்கி வைத்திருப்பதாகக் கருதி அவரைக் கடத்திச் சென்றுள்ளனா். இந்தக் கடத்தலில் அவருக்கு தொடா்பில்லை எனத் தெரிந்து அவரைக் கடத்தல் கும்பல் விடுவித்துள்ளது. கடத்தலில் தொடா்புடையவா்கள் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT