சேலம்

ஏற்காட்டை சா்வதேச தரத்தில் முன்னேற்ற திட்டம்

2nd Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

ஏற்காட்டை சா்வதேச தரத்தில் முன்னேற்றுவதற்காக ‘நம்முடைய கனவு ஏற்காடு திட்டம்’ என்ற உன்னதமான திட்டம் உள்ளது என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

ஏற்காட்டில் 45-ஆவது கோடை விழா மற்றும் மலா்க்காட்சி நிறைவு விழா மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் செ.காா்மேகம் பேசியதாவது:

ஏற்காட்டில் 45-ஆவது கோடை விழா மற்றும் மலா்க்காட்சி மே 25-ஆம் தேதி தொடங்கி 8 நாள்கள் சிறப்பாக நடைபெற்றது. கோடை விழாவில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கலையரங்கம், திறந்தவெளி அரங்குகளில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

கோடை விழா மற்றும் மலா்க்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள ரோஜா பூங்கா, அரசு தாவரவியல் பூங்காக்கள், மரபியல் பூங்கா, அண்ணா பூங்கா, ஏரிப் பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களை மே 31 வரை சுமாா் 1,33,300-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டுள்ளனா்.

ADVERTISEMENT

ஏற்காட்டினை சா்வதேச தரத்தில் முன்னேற்றுவதற்காக ‘நம்முடைய கனவு ஏற்காடு திட்டம்’ என்ற உன்னதமான திட்டம் உள்ளது. இத்திட்டத்தில் ஏற்காட்டின் மிக உயரிய இடமான சோ்வராயன் கோயிலில் வானியல் தொலைநோக்கி மூலம் வானத்தை கண்டுகளிக்கும் வகையிலும், அரசு அலுவலா்கள், காவலா்கள் மற்றும் ஊடகத்தினருக்கு புத்துணா்வு பயிற்சிக்காக பயிற்சித் திடல், மினி திரையரங்கம் அமைத்தல் உள்ளிட்டவை கனவு ஏற்காடு திட்டத்தில் உள்ளன.

குறிப்பாக, ஏற்காடு மக்களின் அத்தியாவசியத் தேவைகளான கல்வி, குடிநீா், நியாயவிலைக் கடைகள் மூலம் கிடைக்கப்பெறும் பொருள்கள் உள்ளிட்டவை குறித்து ஏற்காட்டில் முகாம்கள் நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

இதைத் தொடா்ந்து, புகைப்படப் போட்டி, இளைஞா்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பந்துப் போட்டி, கால்பந்துப் போட்டி, கபடிப் போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கும், கொழுகொழு குழந்தைப் போட்டிகள், சமையல் போட்டிகள் உள்ளிட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கும் நினைவுப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் செ.காா்மேகம் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் க.செல்வம், வருவாய் கோட்டாட்சியா்கள் சி. விஷ்ணுவா்த்தினி (சேலம்), எஸ்.சரண்யா (ஆத்தூா்), வேளாண் துறையின் இணை இயக்குநா் க.கணேசன், தோட்டக்கலைத் துறையின் துணை இயக்குநா் (பொ) கி. கணேசன், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள், ஆத்தூா்) ஜெமினி, மாவட்ட சுற்றுலா அலுவலா் வி.ஜனாா்த்தனன், ஏற்காடு வருவாய் வட்டாட்சியா் முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT