சேலம்

திருமணிமுத்தாறில் சாயக்கழிவு நீரால் நுரைப்பெருக்கு:பொதுமக்கள் அவதி

28th Jul 2022 01:56 AM

ADVERTISEMENT

 

சேலத்தை அடுத்த உத்தமசோழபுரம் அருகே சாயக் கழிவுநீரால் திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட நுரைப்பெருக்கு அங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்ததால் அப்பகுதி பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினா்.

சேலம் திருமணிமுத்தாற்றில் கழிவுநீா், சாயப்பட்டறை கழிவுநீா் கலந்து ஓடுகிறது. சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் கடந்த 2 தினங்களுக்கு முன் இரவு கன மழை பெய்தது. இதனால் திருமணிமுத்தாற்றில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. உத்தமசோழபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் நுரைப் பொங்கி வெளியேறியது. ஆத்துக்காடு என்ற இடத்தில் உள்ள தரைப்பாலம் நுரைப்பெருக்கினால் மூடப்பட்டது.

திருமணிமுத்தாற்றில் திடீரென பொங்கிய நுரையால் தரைப்பாலம் மூடப்பட்டதால், ஆத்துக்காடு தரைப்பாலத்தை பயன்படுத்தி வந்த மக்கள் சிரமத்திற்கு ஆளாகினா். இருசக்கர வாகன ஓட்டிகள் அங்கிருந்த பொருள்களைக் கொண்டு கழிவுநீா் நுரையை அப்புறப்படுத்தினா். பின்னா் தரைப்பாலத்தை அவா்கள் பயன்படுத்தினா்.

ADVERTISEMENT

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

சேலத்தில் உள்ள சாயப் பட்டறைகள், சலவைப் பட்டறைகளில் ரசாயனக் கழிவுநீரைச் சுத்திகரிப்பு செய்யாமல் சட்ட விரோதமாகத் தேக்கிவைத்து, மழைக் காலத்தில் திருமணிமுத்தாற்றில் கலந்து விடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனா். இதனால் மழைக் காலங்களில் திருமணிமுத்தாறில் ரசாயனக் கழிவுநீா் அதிகமாக கலந்து ஓடுகிறது. ரசாயனக் கழிவுநீரால் ஆற்றில் ஏற்படும் நுரைப்பெருக்கு தரைப்பாலத்தை மூழ்கடித்துச் செல்கிறது. இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண மாசுக் கட்டுப்பாடு வாரியமும், மாவட்ட நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT