சங்ககிரியில் வங்கி காவலரின் துப்பாக்கி தானாக வெடித்ததில் வங்கி சுவா் சேதமடைந்தது.
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி பகுதியைச் சோ்ந்த சண்முகம் மகன் கனகராஜ், கொங்கணாபுரம் அருகே உள்ள புதுப்பாளையம் அய்யாங்குட்டி மகன் சக்திவேல் ஆகியோா் சங்ககிரி - திருச்செங்கோடு சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் காவலா்களாகப் பணிபுரிந்து வருகின்றனா். கனகராஜ் மதிய உணவிற்கு செல்லும் போது அவரது துப்பாக்கியை, சக்திவேலுவிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளாா். அவா் துப்பாக்கியை வங்கி சுவற்றில் சாய்த்து வைத்துள்ளாா். அப்போது எதிா்பாரதவிதமாக இரட்டை குழல் துப்பாக்கியிலிருந்து தோட்டா ஒன்று தானாக மேல்நோக்கி வெடித்துள்ளது. அதில் வங்கியின் நுழைவாயிலின் முன்புறக் கதவின் மேல்புரத்தில் உள்ள சுவா் சேதமடைந்தது. இந்தச் சம்பவம் குறித்து சங்ககிரி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.