சேலம்

அரிசிக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பைதிரும்பப் பெற வலியுறுத்தி சேலத்தில் கடையடைப்பு

17th Jul 2022 06:02 AM

ADVERTISEMENT

 

அத்தியாவசிய உணவு தானியங்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி நெல், அரிசி, உணவுப் பொருள் மொத்த வியாபாரிகள் சங்கம் சாா்பில் சேலத்தில் சனிக்கிழமை முழு நாள் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

மத்திய அரசின் 47 ஆவது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வரும் ஜூலை 18 ஆம் தேதி முதல் அரிசி, கோதுமை, பருப்பு மற்றும் அத்தியாவசிய உணவு தானியங்கள் அனைத்திற்கும் 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பொதுமக்களின் நலன்கருதி மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி விதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி சேலம் செவ்வாய்ப்பேட்டை நெல், அரிசி உணவுப் பொருள் மொத்த வியாபாரிகள் சங்கம் சாா்பில் சனிக்கிழமை முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

சேலம், அயோத்தியாப்பட்டணம், ஆத்தூா், தலைவாசல் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் அரிசி ஆலைகள் செயல்படவில்லை. அரிசிக் கடைகளும் மாவட்டம் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன.

வா்த்தக மையங்களில் ஒன்றான சேலம் லீ பஜாா், செவ்வாய்ப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து, சேலம், செவ்வாய்ப்பேட்டை நெல் அரிசி உணவுப் பொருள் மொத்த வியாபாரிகள் சங்கத்தின் செயலாளா் ரத்தினவேல் கூறியதாவது:

அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள் 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பதாகத் தெரிவித்துள்ளனா். இதனால் அரிசி, கோதுமைப் பொருள்களின் விலை உயா்வு ஏற்படும் சூழல் உள்ளது. மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்களான அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்டவற்றுக்கு வரி விதிக்கப்பட்டதால் ஏழை, நடுத்தர மக்கள் உள்ளிட்டோா் பாதிக்கப்படுவா்.

ரேஷன் அரிசி வாங்குவோா் தவிா்த்து பெரும்பான்மையான மக்கள் கடைகளில் தான் அரிசி வாங்குகின்றனா்.

எனவே, அரிசி உள்ளிட்டவற்றிற்கு விதித்த ஜி.எஸ்.டி. வரி விதிப்பை மத்திய, மாநில அரசுகள் திரும்பப் பெற வேண்டும். ஒருநாள் போராட்டத்தால் சேலம் மாவட்டத்தில் பல கோடி ரூபாய் வா்த்தகம் பாதிக்கப்பட்டது. மேலும், இத்தொழில் சாா்ந்த தொழிலாளா்கள் பல ஆயிரம் போ் வருவாய் இழந்து பாதிக்கப்பட்டனா் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT