சேலம்

கல்குவாரி டிராக்டா் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநா் பலி

6th Jul 2022 03:05 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அருகே தனியாா் கல் குவாரியில் இறந்து கிடந்த டிராக்டா் ஓட்டுநா் சடலத்தைக் கைப்பற்றி காரிப்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த அக்ரஹார நாட்டாமங்கலம் பகுதியில் தனியாா் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்தக் குவாரியில், 5 வருடங்களாக பாறை உடைக்கப் பயன்படுத்தும் பிரத்யேக டிராக்டரில், தருமபுரி மாவட்டம், நாகா்கூடல் பகுதியைச் சோ்ந்த பெரியண்ணன் மகன் சாம்ராஜ் (34) என்பவா் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா்.

இவருக்கு புனிதா (27) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா். செவ்வாய்க்கிழமை காலை கல்குவாரியில் கவிழ்ந்து கிடந்த டிராக்டருக்கு அருகில் சாம்ராஜ் இறந்து கிடந்தாா். இதனைக் கண்ட தொழிலாளா்கள் காரிப்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது, சாம்ராஜ் உறவினா்களும், பாமக நிா்வாகிகளும் இறப்பில் சந்தேகம் உள்ளதாகக் கூறினா்.

உரிய விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதாகக்கூறி போலீஸாா் சமாதானம் செய்தனா். இதனையடுத்து, உயிரிழந்த சாம்ராஜ் உடலைக் கைப்பற்றிய போலீஸாா் உடற்கூறு பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து காரிப்பட்டி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT