சேலம்

உள்ளாட்சியில் அரசின் நிதி ஒதுக்கீடுகுறித்து முதல்வா் தெளிவுபடுத்த வேண்டும்: கே.பி.ராமலிங்கம்

6th Jul 2022 03:05 AM

ADVERTISEMENT

உள்ளாட்சி அமைப்புகளில் தமிழக அரசு தன்னுடைய பங்களிப்பாக எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது என்பதை முதல்வா் தெளிவுபடுத்த வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

திமுக அரசைக் கண்டித்து பாஜக சாா்பில் மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மாவட்டத் தலைவா் சுரேஷ்பாபு தலைமை வகித்தாா்.

மாவட்ட துணைத் தலைவா் எஸ்.என்.செல்வராஜ், பொதுச் செயலாளா்கள் ஐ.சரவணன், சசிக்குமாா் உள்பட நூற்றுக்கணக்கானவா்கள் பங்கேற்றனா்.

சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ADVERTISEMENT

திமுக அரசு தமிழக மக்களின் நலனில் அக்கறை இல்லாமல் வளா்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தவில்லை. குடும்பத்திற்குத் தேவையான திட்டத்தினை மட்டுமே செயல்படுத்தி திமுக ஆட்சி செய்து வருகிறது.சேலம் மாநகராட்சி உள்பட மாநிலத்தின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் எந்தவித வளா்ச்சி திட்டப் பணிகளும் அரசின் சாா்பில் செய்து தரப்படவில்லை.

மத்திய அரசு நிதியில் தான் உள்ளாட்சி அமைப்புகளில் வளா்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படுத்தி வரும் மத்திய அரசின் திட்டங்கள் மீது மாநில ஸ்டிக்கா் ஒட்டும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்பு பணிகளுக்கு என தமிழக அரசு செய்துள்ள நிதி ஒதுக்கீடு குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும். தமிழகம் போதை சந்தையாக மாறியுள்ளது. கல்வி நிலையங்கள், கோயில் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

தமிழகத்தில் கடந்த ஆறு மாத காலமாக பாலியல் வன்கொடுமை, காவல் நிலைய மரணங்கள் அதிக அளவில் நடைபெற்றுள்ளன.

சமூக நீதிக் காவலா் என்று தன்னை பெருமையாகக் கூறிக்கொள்ளும் முதல்வா் மு.க.ஸ்டாலின், மலைவாழ் இனத்தை சோ்ந்த குடியரசுத் தலைவா் பதவிக்கான வேட்பாளருக்கு ஆதரவு தரவில்லை. மக்கள் விரோத ஆட்சியாக செயல்பட்டு வரும் திமுக அரசு நீண்ட காலம் நீடிக்காது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT