சேலம்

விதிகளை மீறி பள்ளி மாணவா்களை ஏற்றிச் செல்லும் சுற்றுலா வாகனங்கள்

5th Jul 2022 03:24 AM

ADVERTISEMENT

தம்மம்பட்டி பகுதியில், விதிகளை மீறி தனியாா் பள்ளிகளுக்கு, சுற்றுலா வாகனங்களில் பள்ளி மாணவா்கள் அழைத்துச் செல்லப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் நடப்பு கல்வியாண்டுக்கான அனைத்து அரசு, தனியாா் பள்ளிகளின் வகுப்புகள் கடந்த மாதம் 13 ஆம் தேதிமுதல் தொடங்கப்பட்டன. தம்மம்பட்டி சுற்றுவட்டாரத்தில் இயங்கி வரும் தனியாா் பள்ளிகளுக்கு பள்ளி வாகனங்களைத் தவிா்த்து, சுற்றுலா வேன்கள் மூலமாக பள்ளி மாணவா்களை அழைத்துச் செல்கின்றனா்.

இவ்வாறு பள்ளிகளுக்கு இயக்கப்படும் சுற்றுலா வேன்கள், முறையாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து இ.ஐ.வி., சான்று இல்லாமலும், வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்படாமலும் இயக்கப்படுகிறது. மேலும், பள்ளி வாகனங்களில், குழந்தைகளை ஏற்றி இறக்கி விட கட்டாயம் உதவியாளா்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், உதவியாளா் யாரும் இல்லாமலும், சத்தமாக பாடல்களை ஒலிக்கவிட்டும், அளவுக்கு அதிகமான பள்ளி சிறாா்களை ஏற்றியவாறு இயக்கப்பட்டு வருவதாக புகாா் எழுந்துள்ளது.

தவிர பள்ளிகளுக்கு இயக்கப்படும் வாகனங்களின் ஓட்டுநா்களுக்கு 5 ஆண்டுகள் முன் அனுபவம் கட்டாயம் என்ற, அரசின் உத்தரவுகளை மீறி சில சுற்றுலா வாகனங்கள், பள்ளி வாகனங்களாக இயக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

இதுகுறித்து, ஆத்தூா் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், தம்மம்பட்டி பகுதியில், பள்ளிக்கு இயக்கப்படும் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டு, விதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகனங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT