சேலம்

பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு விரைந்து நடவடிக்கை: ஆட்சியா் உத்தரவு

5th Jul 2022 03:22 AM

ADVERTISEMENT

பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களுக்கு ஆட்சியா் செ.காா்மேகம் உத்தரவிட்டாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், ஜாதிச் சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக் கடன், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீா் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 480 மனுக்கள் வரப்பெற்றன.

மாற்றுத் திறனாளிகள் வழங்கிய 13 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடா்புடைய அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களுக்கு ஆட்சியா் செ.காா்மேகம் உத்தரவிட்டாா்.

முன்னதாக, அம்பேத்கா் பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழ்வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், ஊரக வளா்ச்சித் துறையில் 6 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

தொடா்ந்து, கூட்டுறவுத் துறையின் மூலம் மாற்றுத் திறனாளி சுயதொழில் தொடங்க ரூ. 50 ஆயிரம் வட்டியில்லா கடனுதவிக்கான காசோலையையும் வழங்கினாா்.

கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சீ.பாலச்சந்தா், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ப.ரவிக்குமாா், மண்டலத் தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் க.பவானி, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சு.சத்திய பாலகங்காதரன், மாவட்ட வழங்கல் அலுவலா் அமுதன், துணை ஆட்சியா் (முத்திரைத்தாள் கட்டணம்) துரைமுருகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் முருகன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் இரா.மகிழ்நன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT