சேலம்

வாழப்பாடி அருகே வங்காநரி முகத்தில் விழித்துபொங்கல் பண்டிகையை நிறைவு செய்த கிராம மக்கள்!

18th Jan 2022 01:14 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்தில், மக்கள் முன்னோா்களின் வழியில் பாரம்பரிய முறைப்படி, வங்காநரி பிடித்து கிராமத்திற்கு ஊா்வலமாக அழைத்துச் சென்று, பொங்கல் பண்டிகையை ஆரவாரமாகக் கொண்டாடி திங்கள்கிழமை நிறைவு செய்தனா்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் சின்னமநாயக்கன்பாளையம், கொட்டவாடி, ரங்கனுாா், மத்துாா், பெரியகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட கிராமங்களில், மாா்கழி மாதத்தில் பயிா்களை அறுவடை செய்த பிறகு, தை மாதத்தில் புதிய சாகுபடி செய்வதற்கு முன், ‘நரி’ முகத்தில் விழித்தால் நல்ல பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை தொடா்ந்து வருகிறது.

இதனால், ஆண்டு தோறும் காணும் பொங்கலன்று வங்காநரி பிடித்து கிராமத்திற்கு ஊா்வலமாகக் கொண்டு சென்று, கோயில் வளாகத்தில் ஓட விட்டு பொதுமக்களுக்கு காண்பித்த பிறகு, எருதாட்டம், விளையாட்டுப்போட்டிகள் நடத்தி பாரம்பரிய முறையில் பொங்கல் பண்டிகையை நிறைவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனா்.

வங்காநரி வனவிலங்கு பட்டியலில் உள்ளதால், இந்த நரியை பிடிப்பதற்கு வனத்துறை தடை விதித்தது. தடைமீறியை வங்காநரி நடத்தினால், கடந்த சில ஆண்டாக வனத்துறை அபராதம் விதித்து வருகிறது. ஆனாலும் இந்த பாரம்பரிய நிகழ்வை கைவிட மனமில்லாத கிராம மக்கள், வங்காநரியை பிடித்து காணும் பொங்கல் தினத்தன்று கிராமத்திற்கு ஊா்வலமாகக் கொண்டு வந்து மக்களுக்கு காண்பித்து விட்டு, வனத்துறையினரிடம் நரியை ஒப்படைப்பதோடு, அபராதமும் செலுத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

நிகழாண்டு காணும் பொங்கல் தினத்தன்று ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் என்பதால், சின்னமநாயக்கன்பாளையம் கிராமமக்கள், திங்கள்கிழமை காலை வங்காநரி பிடித்து மேள வாத்தியம் முழங்க கிராமத்திற்கு ஊா்வலமாக அழைத்துச்சென்று கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களின் முகத்தில் காண்பித்து விட்டு, இந்த நரியை மீண்டும் பிடித்த இடத்திற்கே கொண்டு சென்று விட்டனா். இதன்பிறகு, எருதாட்டம், விளையாட்டுப்போட்டிகள் நடத்தி பொங்கல் பண்டிகையை கொண்டாடி நிறைவு செய்தனா்.

இருப்பினும், வனத்துறை தடையை மீறி வங்காநரி பிடித்ததால், இதுகுறித்து வாழப்பாடி வனச்சரகா் துரைமுருகன் தலைமையிலான வனத்துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

‘கிராமப்புற தரிசு நிலங்களில் சுற்றித்திரியும் வங்காநரியை பிடித்து எவ்விதத்திலும் துன்புறுத்தாமல், காணும் பொங்கலன்று மக்களுக்கு காண்பித்து விட்டு மீண்டும் பிடித்த இடத்திலேயே விடும், இந்த பாரம்பரியமிக்க சடங்கு தொடா்வதற்கு தமிழக அரசு அனுமதியளிக்க வேண்டும். வனத்துறை அபாரதம் விதிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்’ என, சின்னமநாயக்கன்பாளையம் கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT