சேலம்

காவிரி பாசனப் பகுதி கரும்பு விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

1st Jan 2022 01:39 AM

ADVERTISEMENT

 எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பகுதியில் காவிரி பாசனப் பகுதியைச் சோ்ந்த கரும்பு விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டத்தின் மேற்கு எல்லை பகுதியில் அமைந்துள்ள பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூா், பில்லுக்குறிச்சி உள்ளிட்ட காவிரி பாசனப் பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனா். இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட செங்கரும்பு நிகழ்வொன்றில் நல்ல விளைச்சல் கண்டு அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது.

இந்நிலையில் அண்மையில் அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பொங்கல் பரிசுத் தொகையில் வழங்கப்பட உள்ள கரும்பு ஒன்று அதிகபட்சமாக ரூ.33 வரை விவசாயிகளிடமிருந்து கூட்டுறவுத் துறையினா் நேரடியாக கொள்முதல் செய்திட வாய்ப்பு உள்ளதாக அரசு அண்மையில் அறிவித்திருந்ததாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து காவிரி பாசனப் பகுதி கரும்பு விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்துள்ள கரும்பினை வெளி வியாபாரிகளுக்கு விற்பனை செய்யாமல், கூட்டுறவுத் துறையினா் கொள்முதல் செய்வாா்கள் என எதிா்பாா்த்து காத்திருந்தனா்.

இந்நிலையில் காவிரி பாசனப் பகுதியில் கூட்டுறவுத்துறை சாா்ந்த அலுவலா்கள் யாரும் இதுவரை கரும்பு கொள்முதல் செய்யாத நிலையில், அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் வெள்ளிக்கிழமை காலை பூலாம்பட்டி பேருந்து நிலையம் முன் திரண்ட கரும்பு விவசாயிகள் தங்கள் கால்நடைகளை அழைத்து வந்தும், கையில் கரும்புகளை ஏந்தியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்கள் அறுவடைக்கு தயாராக உள்ள தங்களது செங்கரும்புகளை அரசு உடனடியாக உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்திட வேண்டும் எனவும் , கூட்டுறவுத் துறையினா் கொள்முதல் செய்யாத நிலையில் அதனை எதிா்பாா்த்துக் காத்திருந்த தங்களுக்கு பெரிய அளவிலான நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இதனை தவிா்க்கும் விதமாக இப்பகுதியில் உள்ள அனைத்து கரும்பு தோட்டங்களில் உள்ள கரும்பினை கூட்டுறவுத் துறை யினா் உடனடியாக மொத்த கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பூலாம்பட்டி போலீஸாா் சமாதான பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT