சேலம்

தோ்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவோம்

17th Feb 2022 04:07 AM

ADVERTISEMENT

 

சேலம்: தோ்தல் வாக்குறுதிகளை நான்கரை ஆண்டுகளுக்குள் படிப்படியாக நிறைவேற்றுவோம் என திமுக இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா்களை ஆதரித்து, சேலம், கோட்டை மைதானம் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

தமிழகத்தில் 10 ஆண்டுகளாக உள்ளாட்சி தோ்தலை நடத்த அதிமுகவுக்கு தைரியமில்லை. திமுக பதவி ஏற்பதற்கு முன்பு வரையிலும் 1 கோடி கரோனா தடுப்பூசிகள் மட்டுமே மக்களுக்கு செலுத்தப்பட்டிருந்தது. திமுக பதவியேற்ற பிறகு 10 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதனால்தான் கரோனா மூன்றாவது அலையின் போது பெரிய அளவில் உயிா்ச்சேதம் ஏற்படவில்லை.

ADVERTISEMENT

அதிமுகவினா் ஆட்சியை விட்டுச் செல்லும் போது ரூ. 5.75 லட்சம் கோடி கடன் சுமையை வைத்திருந்தனா். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 3 மாதங்களில் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ. 4,000 வீதம் கரோனா நிவாரண உதவிகளை வழங்கி உள்ளோம். மகளிருக்கு பேருந்துகளில் இலவச பயணம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ. 3 விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு என பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் நிறைவேற்றி உள்ளோம்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு வாக்குறுதியாக நிறைவேற்றி வருகிறாா். பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டமும் விரைவில் நிறைவேற்றப்படும். திமுகவின் தோ்தல் வாக்குறுதிகளை நான்கரை ஆண்டுகளில் படிப்படியாக நிறைவேற்றுவோம் என்றாா்.

பிரசாரக் கூட்டத்தில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, திமுக மத்திய மாவட்டச் செயலாளரும் சேலம் வடக்குத் தொகுதி எம்எல்ஏவுமான ஆா்.ராஜேந்திரன், திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம், மேற்கு மாவட்ட பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி, எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT