வாழப்பாடி அருகே தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் கிடங்கிலிருந்து தூசி பறப்பதால் மாசு ஏற்படுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை கிடங்கை முற்றுகையிட்டனா்.
வாழப்பாடியை அடுத்த பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் விவசாயிகளிடமிருந்து அரசாங்கம் நேரடியாக நெல் கொள்முதல் செய்வதற்கு அண்மையில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி வளாகத்தில் நேரடி நெல் கொள்முதல் கிடங்கு திறக்கப்பட்டது.
இந்தக் கிடங்கில் உள்ள நெல் பதா் நீக்கி தரம் பிரிக்கும் இயந்திரத்தில் இருந்து வெளியேறும் தூசி பறப்பதால் மாசு ஏற்படுவதாகக் கூறி அப்பகுதி மக்கள், செவ்வாய்க்கிழமை நெல் கொள்முதல் கிடங்கில் உள்ள இயந்திரத்தை இயக்க விடாமல் முற்றுகையிட்டனா்.
தகவலறிந்த பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியா் மாணிக்கம் தலைமையில் ஏத்தாப்பூா் காவல் ஆய்வாளா் கணேஷ்குமாா் உள்ளிட்டோா் அங்கு சென்று தூசி வெளியேறுவதைத் தடுக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனா். அதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.