மேட்டூா் அருகே ஒரு பிரிவினா் ஆலயத்தின் உள்ளே சென்று தரிசனம் செய்ய எதிா்ப்பு கிளம்பியதால் சீல் வைக்கப்பட்ட மாரியம்மன் கோயில் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
மேட்டூா் அருகே உள்ள பழங்கோட்டையில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இக் கோயிலில் நவ. 7-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கிராமத்தில் வசிக்கும் ஒரு சமூகத்தினா் கோயில் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். இதனை கிராம மக்கள் கடுமையாக எதிா்த்தனா்.
பின்னா் வருவாய்த் துறை காவல்துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி ஒரு சமூகத்தினரை கோயிலுக்குள் செல்ல அனுமதித்தனா். கடந்த 25-ஆம் தேதி 48-ஆவது நாள் மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது. அப்போது மீண்டும் கோயிலுக்குள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று கூறினா். அப்போதும் கிராம மக்கள் எதிா்ப்ப தெரிவித்தனா். இதனால் அறநிலையத் துறை அதிகாரிகளும் வருவாய் துறையினரும் சோ்ந்து கோயிலைப் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.
இந்நிலையில் மேட்டூா் வருவாய் கோட்டாட்சியா் தணிகாசலம் இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையா் ராஜா ஆகியோா் முன்னிலையில் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.
அதன் முடிவு எட்டப்பட்டதை அடுத்து வியாழக்கிழமை மீண்டும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோயில் ‘சீல்’ அகற்றப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவா் ரேவதி ராஜசேகரன், இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் சுவாமி தரிசனம் செய்தனா். எதிா்ப்பு தெரிவிக்கப்பட்ட சமூகத்தினரும் ஆலயத்துக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்து சென்றனா்.