சேலம் மாவட்டத்தில் 1,602 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ரூ. 101.52 கோடி கடனுதவி வழங்கினாா்.
சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம், தொங்கும் பூங்கா வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தலைமை வகித்தாா்.
மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன், மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ், மகளிா் திட்ட இயக்குநா் பெ.பெரியசாமிஉள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் அமைச்சா் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆா்.சிவலிங்கம் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
தமிழக முதல்வா் ஸ்டாலின் திருச்சியில் இருந்து காணொலி மூலம் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். விழாவில், 987 ஊரக பகுதியிலுள்ள மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 74.52 கோடி வங்கி கடனுதவி, 14 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ. 6.48 கோடி பெருங்கடனுதவி, 295 ஊரக பகுதியில் உள்ள மகளிா் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 4.42 கோடி சமுதாய முதலீட்டு நிதி, 40 மகளிா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு ரூ. 80 லட்சம் ஆகியவை வழங்கப்பட்டன.
மேலும், 221 நகா்ப்புறங்களைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 14.92 கோடி வங்கி கடனுதவி, 10 நகா்ப்புற மகளிா் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 1 லட்சம் சுழல் நிதி, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் 35 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1.53 லட்சம் இணை மானியம் என 1,602 மகளிா் சுய உதவி குழுக்களுக்கு மொத்தம் ரூ.101.52 கோடி கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.