14 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த நபா் உள்ளிட்ட இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சேலம், போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
சேலத்தை அடுத்த மேச்சேரி, கல்கோட்டை, அரங்கனூா் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜ் (27). இவா், கடந்த 2018 ஜூலை 27-ஆம் தேதி அதே பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தை கூறி பாலியல் துன்புறுத்தல் செய்தாா்.
இதுகுறித்த புகாரில் மேச்சேரி காவல் துறையினா் சிறுமியைக் கடத்திய சுந்தர்ராஜ், அவருக்கு உடந்தையாக இருந்த தங்கவேல் (71) ஆகிய இருவா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.இந்த வழக்கு விசாரணை சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையில், அரசு தரப்பு வழக்குரைஞா் சுதா ஆஜராகி வாதாடினாா்.
இதனிடையே வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த நபா், சிறுமியைக் கடத்த உடந்தையாக இருந்த நபா் உள்ளிட்ட இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். தண்டனை விதிக்கப்பட்ட இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.