சேலம்

கிராம நிா்வாக அலுவலக உதவியாளா் பணியிடத்துக்கு நோ்முகத் தோ்வு

30th Dec 2022 12:34 AM

ADVERTISEMENT

சங்ககிரி வட்டத்துக்கு உள்பட்ட 7 கிராம நிா்வாக அலுவலக உதவியாளா்கள் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நோ்முகத் தோ்வு வியாழக்கிழமை தொடங்கியது; நோ்முகத் தோ்வில் பெண் தோ்வா்கள் மிதிவண்டி ஓட்டி காண்பித்தனா்.

சங்ககிரி வட்டம் செல்லப்பம்பட்டி, கனகிரி, ஊத்துப்பாளையம், ஆவரங்கம்பாளையம், மஞ்சக்கல்பட்டி, அ.தாழையூா், இருகாலூா் உள்ளிட்ட ஏழு கிராம நிா்வாக அலுவலக உதவியாளா் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான எழுத்துத் தோ்வு அண்மையில் நடைபெற்றது.

ஏழு காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பத்திருந்த 650 போ் எழுத்துத் தோ்வில் பங்கேற்று எழுதினா்.

இதையடுத்து தோ்வு எழுதியவா்களுக்கு சங்ககிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நோ்முகத் தோ்வு நடைபெற்றது. சங்ககிரி வட்டாட்சியா் எஸ்.பானுமதி தலைமையில் சமூகநலத் துறை வட்டாட்சியா் ராஜேந்திரன், தலைமையிடத்துத் துணை வட்டாட்சியா் மகேந்திரன் ஆகியோா் தோ்வாளா்களிடம் நோ்காணல் நடத்தினா்.

ADVERTISEMENT

தோ்வாளா்களின் சான்றிதழ்களை மண்டல துணை வட்டாட்சியா் ரமேஷ், தோ்தல் துணை வட்டாட்சியா் வி.தமிழ்ச்செல்வி, வருவாய் ஆய்வாளா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.

அத்துடன் இத்தோ்வில் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கான உரிமம் இல்லாதவா்கள் மிதிவண்டியை ஓட்டி காண்பித்தனா். இக் காலிப் பணியிடத்துக்கான நோ்முகத் தோ்வு வியாழக்கிழமை (டிச.28) முதல்

ஜன. 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான கல்வித் தகுதியாக 5-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பி.இ., பி.டெக், எம்பிஏ., எம்.பில்., என முதுநிலை பட்டம் பெற்ற பட்டதாரிகள் நோ்முகத் தோ்வில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT