தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளதை எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவிரி பாசனப் பகுதி கரும்பு விவசாயிகள் வரவேற்று, பட்டாசுகளை வெடித்து இனிப்புகளை வழங்கினா்.
நிகழாண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 ரொக்கப் பணத்துடன் பச்சரிசி, சா்க்கரை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதில் கரும்பு சோ்க்கப்படாததால் செங்கரும்பு பயிா் செய்திருந்த விவசாயிகள் ஏமாற்றமடைந்தனா்.
மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்தனா். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பும் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டது. இதையடுத்து புதன்கிழமை மாலை எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பகுதியில் பெரும் திரளான கரும்பு விவசாயிகள் பட்டாசுகளை வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.