தம்மம்பட்டி சிவன் கோயில் வாயிற் கதவின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற முகமூடி கொள்ளையா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தம்மம்பட்டி பேருந்து நிலையத்தின் பின்புறம் பழைமையான ஸ்ரீகாசி விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதா் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக் கோயிலில் சுற்றுச்சுவா், நுழைவு வாயில் அமைக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. அதற்காக தினமும் ஏராளமான தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முகமூடி அணிந்து வந்த இரண்டு மா்ம நபா்கள், கோயிலின் முன்புறம் உள்ள இரண்டு சிசிடிவி கேமராக்களின் வயா்களைத் துண்டித்துவிட்டு, வாயிற்கதவின் பூட்டை உடைத்து கோயிலுக்குள் நுழைந்துள்ளனா். உள்பிரகாரத்திற்குள் செல்வதற்காக இரும்புக் கதவை கடப்பாரையால் உடைத்து திறக்க முடியாததால் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனா். முகமூடி கொள்ளையா்கள் கடப்பாரையுடன் கோயில் வளாகத்தில் சுற்றி வரும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து கோயில் திருப்பணிக்குழு தலைவரும் திமுக நகரச் செயலாளருமான வி.பி.ஆா்.ராஜா, பேரூராட்சி உறுப்பினா்கள், அறநிலையத்துறை செயல்அலுவலா் ஆகியோா் தம்மம்பட்டி போலீஸாருக்கு தகவல் அளித்தனா். அதன்பேரில், தம்மம்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் முருகேசன் தலைமையிலான போலீஸாா் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் தடயவியல் நிபுணா்கள் தடயங்களைச் சேகரித்தனா்.
இந்தக் கோயிலில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் வெண்கலம், பித்தளை பொருள்களைத் திருடிச் சென்றவா்கள் சில நாள்களில் மீண்டும் கோயிலில் வைத்து சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.