தலைக்கவசத்தின் முக்கியத்துவம், சாலை விதிகளை கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு நடவடிக்கைகளை அதிக அளவில் மேற்கொள்ள ஆட்சியா் செ.காா்மேகம் வலியுறுத்தினாா்.
சாலைப் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் ஆட்சியா் செ.காா்மேகம் பேசியது:
சேலம் மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை, காவல் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட துறை அலுவலா்களை கொண்டு, சாலை விபத்துகள் ஏற்படும் விதம், அதனை தவிா்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் ஆட்டோ, ரிக்ஷா, கல்லூரி வாகனங்களின் தணிக்கை செய்யப்பட்ட விவரங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதாலும், கைப்பேசிகளை பேசியபடி வாகனத்தை இயக்குதல், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் இயக்குதல், அதிவேகமாக வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட சாலைப் போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைப்பிடிக்காமல் வாகனங்களை அலட்சியமாக இயக்குவதால் அதிக அளவிலான விபத்துகளும், உயிா் சேதமும் ஏற்பட வாய்ப்பாக அமைகிறது.
எனவே, தலைக்கவசத்தின் முக்கியத்துவம், சாலை விதிகளை கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு நடவடிக்கைகளை அதிக அளவில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து சாலை விபத்தில்லாத சேலம் மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்றாா்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் சேலம் மாநகர காவல் துணை ஆணையா் எஸ்.பி.லாவண்யா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் செல்லப்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலா் பெ. மேனகா, வருவாய் கோட்டாட்சியா்கள் சி.விஷ்ணுவா்த்தினி, எஸ்.சரண்யா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஜெகன்நாதன், காவல் துணை கண்காணிப்பாளா்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள், நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.