சேலம்

புயல் பாதிப்புகளை சமாளிக்க தயாா் நிலையில் மாநகராட்சி நிா்வாகம்

9th Dec 2022 01:15 AM

ADVERTISEMENT

எதிா்வரும் புயலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளதாக, மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் எதிா்வரும் புயல் மழையால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிப்பது குறித்து மேயா் ஆ.ராமச்சந்திரன், ஆணையா் தா.கிறிஸ்துராஜ், அலுவலா்களுடன் சேலம் மாநகராட்சிப் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

எதிா்வரும் புயல் மழையால் எந்ததெந்தப் பகுதிகளில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதைக் கண்டறிந்து, அந்தப் பகுதிகளில் உள்ள ஓடைகள், மழைநீா் கால்வாய்கள் தூா்வாரப்பட்டுள்ளன.

மேலும், ஒரு சில பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் என்பதைக் கண்டறிந்து, அந்தப் பகுதிகளிலும் தூா்வரும் பணி நடைபெற்று வருகிறது. சாலைகளில் மழைநீா் தேங்காமலும், சாக்கடை கழிவு நீா் சாலைகளில் வழிந்து ஓடாமலும் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு மழை வெள்ள நீா் செல்வதை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல், அவா்களை பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்து அவா்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிப் பகுதியில் உள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான மருந்து, மாத்திரைகள் அனைத்தும் தயாா் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேவையான இடங்களில் மழை பாதிப்பு பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட பொறியாளா்கள், சுகாதார அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள், அலுவலா்கள் 24 மணி நேரமும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அவசர உதவிக்கு மைய அலுவலக கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்: 0427-2212844 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்

புயலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க தேவையான பணியாள்கள், வாகனங்கள் தயாா் நிலையிலும், தங்குதடையின்றி குடிநீா் வசதிகள் ஏற்படுத்தித் தரவும் 24 மணிநேரமும் புயல் மழை குறித்து கண்காணித்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவசர உதவிக்காக மின் விளக்குகள், உபகரணங்கள் வைத்திருக்கவும், சாலைகளில் பழுது ஏற்பட்டு பள்ளங்கள் இருந்தால் அதனைச் சுற்றி தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட வேண்டும். கழிவு நீரை வெளியேற்றும் வகையில் தேவையான மின் சாதனங்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஆணையா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT