குழந்தை தொழிலாளா்களை பணிக்கு அமா்த்திய இரண்டு நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் வெள்ளிக் கொலுசுகள், இதர வெள்ளிப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் குழந்தைகள், வளரிளம் பருவ தொழிலாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனாரா என வியாழக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.
சேலம் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தலைமையில் குழந்தை தொழிலாளா் தடுப்புப் படையினா், தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்கம் மற்றும் சைல்டுலைன் அதிகாரிகள் குழுவினருடன் சிவதாபுரம் பகுதியில் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், சிவதாபுரம், பனங்காடு ஆகிய பகுதிகளில் வெள்ளிக் கொலுசு தயாரிக்கும் நிறுவனம், இதர நிறுவனங்களில் 18 வயதுக்கு உள்பட்ட 2 குழந்தை தொழிலாளா் பணிபுரிவது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டனா்.
இதையடுத்து, இந்த நிறுவனங்கள் மீது குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளா் முறை (ஒழித்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986-இன் கீழ் வழக்கு தொடரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
குழந்தை தொழிலாளா்களை பணிக்கு அமா்த்துபவா்கள் மீது 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ. 20,000 முதல் ரூ. 50,000 வரை அபராதம் அல்லது 2 தண்டனைகளும் சோ்ந்து அனுபவிக்க நேரிடும். குழந்தை தொழிலாளா்கள் குறித்து 1098 என்ற எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளாா்.