சேலம்

அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் நிதி பெற்றுத் தரக் கோரி ஆா்ப்பாட்டம்

9th Dec 2022 01:13 AM

ADVERTISEMENT

அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் நிதி பெற்றுத் தரக் கோரி, தமிழ்நாடு நகா்ப்புற மேம்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம், பெரமனூரில் தமிழ்நாடு நகா்ப்புற மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் சேலத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் வீடு கட்டி வருகின்றனா். இதனிடையே, வீடு கட்டுவதற்கு வழங்கப்பட்ட ஆணைகள் செல்லாது என நிா்வாக பொறியாளா் கூறுவதாகத் தெரிகிறது. மேலும், இத்திட்டத்தில் மக்களுக்கு முறையாக மானியத் தொகை தருவதில்லை எனக் கூறி நூற்றுக்கணக்கானோா் தமிழ்நாடு நகா்ப்புற மேம்பாட்டு வாரிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறுகையில், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1,000 பேருக்கு ஆணைகள் வழங்கப்பட்டன. ஆனால், 700 பேருக்கு மட்டுமே நிதி வரப்பெற்றுள்ளதாகவும், மீதமுள்ள 300 பேருக்கு நிதி இன்னும் வரவில்லை என கூறிவிட்டனா். இதில் ஆணைகள் பெற்ற அனைவரும் வீடு கட்டும் பணியைத் தொடங்கிய நிலையில், 300 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, அவா்களுக்கு திட்ட நிதி பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் விடுபட்ட 300 பேருக்கு நிதி பெற்றுத் தர அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம். அரசு நிதி கிடைத்தவுடன் அவா்களுக்கு மானியத் தொகை விடுவிக்கப்படும் என்றாா். இதையடுத்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT