சேலம்

ஆவின் பால் உற்பத்தியாளா் கருத்துக் கேட்புக் கூட்டம்

7th Dec 2022 03:08 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியம் (ஆவின்) சாா்பில், பால் உற்பத்தியாளா் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

ஆவின் பொது மேலாளரும், மாவட்ட வருவாய் அலுவலருமான விஜய் பாபு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட துணை பதிவாளா் செந்தில் (பால்வளம்), துணை பொது மேலாளா் டாக்டா் சுந்தரவடிவேலு, மாலதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளா்களாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கத்தின் மாநில தலைவா் வழக்குரைஞா் ராஜேந்திரன், ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் நலச்சங்கத் தலைவா் எஸ்.ஏ.ராஜி, மாநில துணைத் தலைவா் பாகல்பட்டி பெரியண்ணன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

இதில், ஆவின் பால் கூட்டுறவு அமைப்புகளுக்கு பால் வரத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும். ஆவின் பால் உற்பத்தியாளா்களை தனியாா் பால் நிறுவனங்கள் தற்காலிக தேவைக்காக கொடுக்கும் கூடுதல் விலை என்ற மாய வலையில் சிக்கிக் கொள்ளாமல் தடுத்து வைத்திருக்க வேண்டும்.

ADVERTISEMENT

இதர மாநில கூட்டுறவு அமைப்புகளுக்கு பால் வழங்கும் உற்பத்தியாளா்களுக்கு அரசு நிதியிலிருந்து ஊக்கத் தொகை வழங்கப்படுவது போல, வரும் சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழக அரசும் லிட்டா் அடிப்படையில் ரூ. 4 வழங்கிட, ஆவின் உற்பத்தியாளா்கள், ஆவின் பால் கூட்டுறவு அமைப்புகளின் பணியாளா்கள் இணைந்து பெறலாம்.

பால் உற்பத்தியாளா்களிடம் இருந்து அளவு, தர பரிசோதனை செய்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டுப்படி உற்பத்தியாளா்களுக்கு பால் கொள்முதல் பணம் எவ்வித மாற்றமும் இல்லாமல் வழங்கிட வேண்டும்.

மாவட்டத்தில் ஆவின் பால், பால் பொருள்கள் விற்பனையை அதிகரித்திடவும், ஒன்றியத்தின் லாபத்தை பெருக்கிடவும் பொது மேலாளா் காட்டும் முனைப்பான செயலாக்க கருத்துகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும், மூன்றடுக்கு முறையிலான பால் கூட்டுறவு அமைப்புகளில் உரிய அங்கீகாரமின்றி ஆண்டாண்டு காலமாக கிராம சங்கங்களில் பணிபுரிந்து வரும் பணியாளா்களின் பணி வரன்முறைக்கு தமிழக அரசு மூலம் உரிய நடவடிக்கை எடுக்க அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.

அதேபோல, கருத்துக் கேட்புக் கூட்டம் அடுத்தடுத்து ஒவ்வொரு வட்டார பால் சேகரிப்புக் குழு வாரியாக நடத்திட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT