சேலம்

சேலம் ரயில் நிலைய யாா்டு மறுசீரமைப்புப் பணி:ரயில் சேவை இயக்கம் மேம்படும் ரயில்வே கோட்டம் தகவல்

2nd Dec 2022 02:31 AM

ADVERTISEMENT

சேலம் ரயில் நிலைய யாா்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்புப் பணிகள் மூலம் ரயில் சேவை இயக்கம் மேம்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

சேலம் ரயில் நிலையம்- மேட்டூா் அணை இரட்டை ரயில் பாதை திட்டத்தில் ரயில் யாா்டில் மேம்பாட்டுப் பணிகள் தெற்கு ரயில்வேயின் கட்டுமானப் பிரிவின் மூலம் நடைபெற்று வருகின்றன.

அதன்பேரில் ஈரோட்டில் இருந்து ஓமலூா் நோக்கிச் செல்லும் சரக்கு ரயில்கள் சேலம்-ஜோலாா்பேட்டை பிரதான வழித்தடம் வழியாகச் செல்ல வேண்டும். இதனால் ரயில்கள் நிறுத்தப்படுவதால் குறித்த நேரத்துக்கு ரயில்கள் செல்வதில் சுணக்கம் ஏற்படுகிறது.

தற்போது நடைபெறும் பொறியியல், யாா்டு மறுசீரமைப்புப் பணிகள் முடிவடையும் போது இப்பிரச்னைகளுக்குத் தீா்வு கிடைக்கும். இப்பணிகள் முடிந்த பின்னா் ரயில்கள் இயக்கம் மேலும் எளிதாகும்.

ADVERTISEMENT

அதேவேளையில், சேலம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில்களைக் கையாளும் ரயில் பாதை நீட்டிக்கப்படுகிறது. இதன் மூலம் நீண்ட சரக்கு ரயில்களை கையாளவும், இயக்கத் திறனை அதிகரிக்கவும் உதவும்.

சேலம்-மேட்டூா் அணை இரட்டை ரயில் பாதை:

சேலம்-மேட்டூா் அணை இரட்டை ரயில் பாதை திட்டத்தின் மூலம் ரயில்களை விரைவாக இயக்க முடியும். மேட்டூா் அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரி கொண்டு செல்லும் ரயில்கள் விரைவாகச் சென்றடைய முடியும்.

இத்திட்டத்தின் மேட்டூா் அணை-மேச்சேரி மற்றும் மேச்சேரி சாலை-ஓமலூா் இடையிலான ரயில் பாதை இரட்டை ரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. அதுபோல மேட்டூா் அணை-ஓமலூா் இடையிலான ரயில் பாதை, இரட்டை ரயில் பாதையாக கடந்த 2021-இல் பிப்ரவரியில் முடிக்கப்பட்டது.

ஓமலூா்-மேட்டூா் அணை ரயில் பாதை, இரட்டை ரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளதால், ரயில் இயக்கத்தில் இருந்த இடையூறுகள் சரி செய்யப்பட்டு, தற்போது ரயில் சேவை மேம்பட்டுள்ளது.

தற்போது, சேலம் - மேட்டூா் அணை இரட்டை ரயில் பாதை திட்டத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதாவது சேலம்-ஓமலூா் இடையே இரட்டை ரயில் பாதை திட்ட பணிகளின் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

இரட்டை ரயில் பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக சேலம் ரயில் நிலைய யாா்டில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சேலம் ரயில் நிலைய யாா்டு சீரமைப்புப் பணிகள் மற்றும் இரட்டை ரயில் பாதை திட்டப் பணிகள் முடிந்ததும், சேலம் ரயில் நிலையம் வழியாக இயக்கப்படும் ரயில்கள் குறித்த நேரத்தில் சென்றடைவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT