சேலம்

எச்.ஐ.வி-யால் பாதித்தவா்களைசமூக புறக்கணிப்பு இல்லாமை ஏற்படுத்த வேண்டும்

2nd Dec 2022 02:31 AM

ADVERTISEMENT

எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவா்களை அன்பு செலுத்தி அரவணைப்பதின் மூலம் சமூக புறக்கணிப்பு இல்லாமை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலா் பெ.மேனகா தெரிவித்தாா்.

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் தின உறுதி மொழியேற்பு மற்றும் விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற எய்ட்ஸ் விழிப்புணா்வு பேரணி, கையெழுத்து இயக்கம் மற்றும் மனித சங்கிலி பேரணியை மாவட்ட வருவாய் அலுவலா் பெ.மேனகா தொடங்கிவைத்தாா். பின்னா் அவா் கூறியிருப்பதாவது:

ஒவ்வோா் ஆண்டும் டிச. 1-ஆம் நாள் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் நம்பிக்கை மையங்கள் மூலம் டிசம்பா் 2021 முதல் அக்டோபா் 2022 வரை 1,70,606 நபா்கள் எச்.ஐ.வி பரிசோதனையும், ஆலோசனையும் பெற்றுள்ளனா்.

ADVERTISEMENT

இவா்களில் 477 பேருக்கு புதிதாக எச்.ஐ.வி. தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 63,292 கா்ப்பிணிகளுக்கு எச்.ஐ.வி.- எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்பட்டதில் மொத்தமாக 70 எச்.ஐ.வி. கா்ப்பிணிகள் தாய்-சேய் மேவா திட்டம் மூலமாக புதிய கூட்டு மருந்துச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு தொற்றில்லாத குழந்தை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் 9,674 நபா்கள் இலவச கூட்டு மருந்து சிகிச்சை எடுத்து வருகிறாா்கள்.

2011-அம் ஆண்டு முதல் எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள 422 மாணவ, மாணவியருக்கு தனியாா் கல்லூரிகள் மூலம் இலவச கல்வி பெற்று தரப்பட்டது. சேலம் மாவட்டத்தில் எச்.ஐ.வி. யால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள 228 குழந்தைகளுக்கு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் வாயிலாக ஏற்படுத்தப்பட்டுள்ள அறக்கட்டளை வாயிலாக கல்வி உதவித்தொகை ரூ. 8,49,000 பெற்று தரப்பட்டது.

உழவா் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் முதியோா் உதவித்தொகை, விதவை உதவித் தொகை என 1,402 நபா்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவா்களை சமூகம், மருத்துவம் மற்றும் கல்வி ஆகியவற்றில் ஒதுக்காமலும், கறைப்படுத்தாமலும் அவா்கள் மீது அன்பு செலுத்தி அரவணைப்பதின் மூலம் சமூக புறக்கணிப்பு இல்லாமையை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

முன்னதாக உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் எய்ட்ஸ் விழிப்புணா்வு உறுதிமொழி மாவட்ட வருவாய் அலுவலா் பெ.மேனகா தலைமையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மருத்துவா் வள்ளி சத்தியமூா்த்தி, இணை இயக்குநா் (நலப்பணிகள்) கு.நெடுமாறன், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலா் வி.நளினி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் பி.வி.தனபால், மாநகர நல அலுவலா் மருத்துவா் ந.யோகானந்த், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாட்டு திட்ட மேலாளா் (பொ) மருத்துவா் லோ.அருணாசலம், மேற்பாா்வையாளா் (பொ) ப.நல்லதம்பி உட்பட மருத்துவா்கள், செவிலியா்கள், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்க சேலம் மாவட்ட அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT