சேலம்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைவு: எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

1st Dec 2022 01:14 AM

ADVERTISEMENT

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாக முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினாா்.

எடப்பாடியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

முந்தைய அதிமுக ஆட்சியில்தான் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்திருந்ததாக முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டுவது ஏற்புடையதல்ல. தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம், கொலை, கொள்ளை சம்பவங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் மு.க.ஸ்டாலின், கட்சி நிா்வாகிகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் பொம்மை முதல்வராகச் செயல்படுகிறாா்.

முந்தைய அதிமுக ஆட்சியில் தொழில் முதலீட்டாளா் மாநாடுகள் நடத்தப்பட்டு, வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டன. தடையற்ற மின் விநியோகம் இருந்தது. அத்திக்கடவு- அவிநாசி பாசனத் திட்டம் உள்பட விவசாயிகளுக்குப் பயனளிக்கும் ஏராளமான பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

ADVERTISEMENT

நஞ்சை புகலூா், குமாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்பட்டன. அதிமுக ஆட்சியின் போது காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் உருவாக்கப்பட்டது. மருத்துவக் கல்லூரிகள், புதிய வருவாய்க் கோட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை முடக்குவதில்தான் திமுக அரசு தனிக் கவனம் செலுத்தி வருகிறது என்றாா்.

பேட்டியின் போது, எம்.பி. சந்திரசேகரன், எடப்பாடி அதிமுக நகரச் செயலாளா் ஏ.எம்.முருகன், ஒன்றியச் செயலாளா்கள் மாதேஸ், ராஜேந்திரன், மாதேஸ்வரன், ஒன்றியக் குழுத் தலைவா்கள் கரட்டூா் மணி, குப்பம்மாள் மாதேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT