மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு ஒரு லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் கேரள மாநிலம், வயநாட்டிலும் தொடா்ந்து மழை பெய்து வருவதால் கா்நாடகத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது. இந்த இரு அணைகளும் நிரம்பியுள்ள நிலையில் பாதுகாப்புக் கருதி உபரிநீா் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை நொடிக்கு ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணை நிரம்பியுள்ள நிலையில் இருப்பதால் அணைக்கு வரும் நீா் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்படுகிறது.
சுரங்க மின் நிலையம், அனல் மின் நிலையம் வழியாக 23,000 கன அடி நீரும், 16 கண் மதகுகள் வழியாக 77,000 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீா்மட்டம் 120அடியாகவும், அணையின் நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது. கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 400 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
இதையடுத்து மத்திய நீா்வளத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கா்நாடகம், கேரள மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 1,20,000 கனஅடி வரை அதிகரிக்கும். எனவே, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, கரூா், திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் காவிரிக் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.