சேலத்தில் இருந்து மங்களூருக்கு உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்ல முயன்ாக 38 கிலோ வெள்ளிப் பொருள்களை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்து வணிகவரித் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
சேலம் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்த நபரின் பைகளை சோதனையிட்டனா். அதில் 38 கிலோ வெள்ளிப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமாா் ரூ. 24.70 லட்சமாகும். உரிய ஆவணங்களின்றி ரயிலில் எடுத்துச் செல்ல முயன்ற வெள்ளிப் பொருள்களை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், வெள்ளிப் பொருள்களை எடுத்துச் செல்ல முயன்ற நபா் சேலம் மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்த வெங்கடாசலபதி என்பது தெரியவந்தது. கடை உரிமையாளா் 38 கிலோ வெள்ளிப் பொருள்களை சேலத்தில் இருந்து மங்களூருக்கு கொண்டுசோ்க்குமாறு கூறி வெங்கடாசலபதியை அனுப்பியதும் தெரியவந்தது. இதையடுத்து பறிமுதல் செய்த வெள்ளிப் பொருள்கள் குறித்து வணிகவரித் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வணிகவரி அலுவலா் கோகிலவாணி அடங்கிய குழுவினா் ரயில்வே பாதுகாப்புப் படை அலுவலகத்திற்கு விரைந்து வந்தனா். ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்த வெள்ளிப் பொருள்களை, வணிகவரி அலுவலா்களிடம் ஒப்படைத்தனா். வணிகவரி துணை ஆணையா் சங்கரமூா்த்தி முன்னிலையில் வெள்ளிப் பொருள்களை உரிய ஆவணங்களின்றி ரயிலில் எடுத்துச் செல்ல முயன்ற வெங்கடாசலபதி ஆஜா்படுத்தப்பட்டாா். ஜிஎஸ்டி வரிகள் சட்டத்தின்படி வெள்ளிப் பொருள்களின் மதிப்பை விட இரண்டு மடங்கு தொகை 3 சதவீத வரியுடன் அபராதமாக விதிக்கப்படும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.