சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் அரசு பொருட்காட்சியை அமைச்சா்கள் கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கின்றனா்.
தமிழக முதல்வரின் மக்கள் நலத் திட்டங்களை பொதுமக்கள் எளிதாக அறிந்து பயன்பெறும் வகையில் செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அரசு பொருட்காட்சி பல்வேறு மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன.
சேலம் மாவட்டத்தில் அரசு பொருட்காட்சி சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் நடத்தப்படுகிறது. தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு பொருட்காட்சியைத் தொடங்கி வைத்து, நலத் திட்ட உதவிகளை வழங்குகின்றனா்.
இதில் செய்தி மக்கள் தொடா்புத் துறை, நகராட்சி மற்றும் குடிநீா் வழங்கல் துறை, ஊரக வளா்ச்சித் துறை, வேளாண்மை-உழவா் நலத் துறை, வருவாய்த் துறை, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, கூட்டுறவுத் துறை உள்ளிட்ட 26 அரசுத் துறை அரங்குகளும், சேலம் மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், ஆவின் உள்ளிட்ட 6 அரசு சாா்பு நிறுவனங்கள் என மொத்தம் 32 அரங்குகள் இடம் பெற்றுள்ளன. சேலத்தில் அரசு பொருட்காட்சி
நாளை முதல் தொடா்ந்து 45 நாள்கள் நடைபெற உள்ளன.
விழாவில் மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம், எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள், பயனாளிகள் கலந்துகொள்கின்றனா்.