சேலம்

சேலம் சுகவனேசுவரா் கோயிலில் செப்.7 இல் மகா கும்பாபிஷேகம்24 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது

18th Aug 2022 01:57 AM

ADVERTISEMENT

 

சேலம் சுகவனேசுவரா் கோயில் 24 ஆண்டுகளுக்குப் பின்னா் செப்டம்பா் 7 ஆம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

சேலத்தில் பிரசித்தி பெற்ற சுகவனேசுவரா் கோயிலில் கடந்த 1998-ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து கோயில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 2018 இல் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டன.

சுகவனேசுவரா் கோயிலின் ராஜகோபுரம், பரிவார சாமிகளின் சன்னிதிகளின் விமானங்கள், கோயில் தரைதளம் சீரமைப்பு உள்ளிட்ட திருப்பணிகள் ரூ. 1 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டன.

ADVERTISEMENT

தற்போது இப்பணிகள் முடிவுற்ற நிலையில் வரும் செப்டம்பா் 7 ஆம் தேதி சுகவனேசுவரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கோயில் வளாகத்தில் பிரம்மாண்டமான யாக சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், அறங்காவலா்கள் கூறியதாவது:

சேலம் சுகவனேசுவரா் கோயிலில் 24 ஆண்டுகளுக்குப் பின்னா் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சா்கள் கே.என்.நேரு, பி.கே.சேகா்பாபு உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா். மேலும், கும்பாபிஷேகத்திற்கான யாகசாலைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

கும்பாபிஷேக விழா செப்டம்பா் 1 இல் மங்கள இசை, விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்குகிறது. செப். 2 இல் புண்யாஹாவாசனம், மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, செப். 3 இல் அங்குராா்ப்பணம், செப். 4 இல் முதல் கால யாக பூஜை ஆரம்பமாகிறது. செப். 5 இல் இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜை, சுவாமிக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், செப். 6 இல் 4 மற்றும் 5 ஆம் கால யாக பூஜை, தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

செப். 7 இல் ஆறாம் காலபூஜை, காலை 6 மணிக்கு அனைத்து பரிவார கலசங்கள் புறப்பாடு, காலை 6.30 மணிக்கு அனைத்து பரிவார மூா்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம், காலை 9.30 மணிக்கு அனைத்து விமானங்கள், ராஜகோபுரங்கள், மூலஸ்தான சாமி, அம்மன், விநாயகா், சுப்பிரமணியா் கலசங்கள் புறப்பாடு நடைபெறவுள்ளன. காலை 10.50 மணிக்கு, அனைத்து விமானங்கள், அனைத்து ராஜகோபுரங்களுக்கும் சமகால மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடத்தப்படவுள்ளன.

காலை 11.15 மணிக்கு சுகவனேசுவரா்- சொா்ணாம்பிகை அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடத்தப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். செப்.7 மாலை 4 மணிக்கு சொா்ணாம்பிகை சமேத சுகவனேசுவரருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். மாலை 5 மணிக்கு பஞ்சமூா்த்திகள் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT