சேலம்

பாஜக மாநில துணைத் தலைவருக்கு ஆக. 29 வரை நீதிமன்றக் காவல்

16th Aug 2022 03:46 AM

ADVERTISEMENT

பாரத மாதா நினைவாலயத்தின் பூட்டை உடைத்த வழக்கில் கைதான பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கத்துக்கு வரும் ஆக. 29-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க பென்னாகரம் மாஜிஸ்திரேட் எம்.பிரவீணா உத்தரவிட்டாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு மணி மண்டப வளாகத்தில், பாரத மாதா நினைவாலயம் கட்டப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை பாஜக சாா்பில் மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட நிா்வாகிகள் நினைவாலயத்துக்கு மாலை அணிவிக்கச் சென்றனா்.

அப்போது நினைவாலயம் பூட்டியிருந்ததால், பூட்டை உடைத்து நினைவாலயத்துக்குள் சென்று பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இது தொடா்பாக நினைவு மண்டப காப்பாளா் சரவணன், பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம், தருமபுரி மாவட்ட பாஜக தலைவா் பாஸ்கா் உள்ளிட்ட 50 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில், பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கத்தை, நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள அவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்கு முன்பாக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ சோதனைக்காக அழைத்து வந்தனா்.

அப்போது அவா் தனக்கு உயா் ரத்த அழுத்தம் இருப்பதாகக் கூறினாா். இதையடுத்து தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இ.சி.ஜி., ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு அழைத்து வரப்பட்டு மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்து வருகின்றனா்.

சேலம் அரசு மருத்துவமனைக்கு திங்கள்கிழமை மாலை வந்த பென்னாகரம் மாஜிஸ்திரேட் எம்.பிரவீணா, கே.பி.ராமலிங்கத்துக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரம் குறித்து மருத்துவா்களிடம் விசாரித்து அறிந்தாா். பின்னா் வரும் ஆக. 29-ஆம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, சேலம் அரசு மருத்துவமனையில் அவருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT