சேலம்

சேலம் அருகே காணாமல் போன கிணற்றை மீட்ட அதிகாரிகள்

14th Aug 2022 09:19 AM

ADVERTISEMENT

சேலம் அருகே காணாமல் போன கிணறு மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ராமிரெட்டிபட்டி கிராமத்தில் உள்ள மந்தை தோப்பூர் பகுதியில் 50 ஆண்டுக்கு முன்பு மக்களின் குடிநீர் தேவைக்காக அரசு கிணறு அமைத்து கொடுத்திருந்தது. பொது கிணற்றில் இருந்து மக்கள் நீரை இறைத்து பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் கிணற்று நீரை பயன்படுத்தாமல் போனதால், கிணறு பயன்பாடு இன்றி இருந்து வந்தது.

அந்த கிணறு தனியாரால் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிக்கப்பட்டு, மூடி மறைக்கப்பட்டது. இதனை அறிந்த பொதுமக்கள் கிணற்றை மீட்க நீண்ட காலமாக அதிகாரிகளிடம் புகார் மனுக்களை கொடுத்து, காணாமல் போன கிணறை மீட்க வேண்டி கோரிக்கை வைத்து வந்தனர். பொதுமக்களின் தொடர் நடவடிக்கையால், கிணறு இருந்த இடம் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரின் பெயரில் இருப்பது தெரியவந்தது.

இதையும் படிக்க- காலை உணவுத் திட்டம்: ஒருங்கிணைப்பு அலுவலரின் பணிகள் என்னென்ன?

ADVERTISEMENT

அரசுக்கு சொந்தமான இடம் என்பதால் அந்த இடத்தில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனை அறிந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கிணற்று பகுதியில் அரசு கட்டுமானப் பணி மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அறிந்து ஊர் மக்கள் திரண்டு வந்து தாரமங்கலத்தில் இருந்து ஜலகண்டாபுரம் செல்லும் சாலையில், மறியலில் ஈடுபட்டனர். 

காணாமல் போன பொது கிணற்றை மீட்டுத் தரவேண்டும் என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடம் வந்த தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், எஸ்ஐ காமராஜ் , வருவாய் ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் சத்தியராஜ் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட  பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.

அதிகாரிகள் பொதுக்கிணறு ஆக்கிரமிப்பு செய்து மூடப்பட்ட இடத்தை பொக்லைன் இயந்திரம்  மூலம் தோண்டிய போது 30 அடி ஆழம் கொண்ட வட்ட கிணறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஊர் மக்களையும், ஆக்கிரமிப்பாளர் தரப்பினரையும்  ஓமலூர் வட்டாட்சியர்  அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கிணற்றை கண்டுபிடித்து தரக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் பொது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அனுராதா கொடுத்த புகாரின் பேரில்,  ராமிரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த  40 பேர் மீது தாரமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காணாமல் போன கிணறு மீட்கப்பட்ட சம்பவம் தாரமங்கலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

Tags : Salem well
ADVERTISEMENT
ADVERTISEMENT