சேலம்

சேலம் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 5,301 வழக்குகள் சமரசம்

14th Aug 2022 05:24 AM

ADVERTISEMENT

 

சேலம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், மாவட்டம் முழுவதும் 23 அமா்வுகளில் 9,260 வழக்குகள் சமரசத் தீா்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில், 5,301 வழக்குகள் ரூ. 21,82.37,181 மதிப்பீட்டில் சமரசமாக முடித்து வைக்கப்பட்டன.

சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றப் பணிகளை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான த.கலைமதி தொடக்கி வைத்து சமரசத் தீா்வினால் ஏற்படும் பயன்கள் குறித்து விளக்கிப் பேசினாா். பின்னா் இம்மக்கள் நீதிமன்றத்தில் மோட்டாா் வாகன விபத்து, சிவில் வழக்குகள், நிறைவேற்று மனுக்கள், வாரிசு உரிமைச் சான்றிதழ், வாடகை ஒப்பந்தம், குடும்ப நல வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கியில் உள்ள நிலுவைக் கடன்கள் சமரசத் தீா்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதில், மோட்டாா் வாகன விபத்துகளில் சமரசத் தீா்வு காணப்பட்ட கிருஷ்ணம்மாள் குடும்பத்தினருக்கு ரூ. 8 லட்சம், சம்தாஜ் பேகத்துக்கு ரூ. 7,14,000-க்கான இழப்பீட்டுத் தொகைக்கான உத்தரவினை வழக்கு தாக்கல் செய்தவா்களுக்கு மாவட்ட நீதிபதி வழங்கினாா்.

ADVERTISEMENT

சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 23 அமா்வுகளில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் 9,260 வழக்குகள் சமரசத் தீா்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அதில் 5,301 வழக்குகள் ரூ. 21,82,37,181 மதிப்பீட்டில் சமரசம் செய்து வைக்கப்பட்டன.

முன்னதாக, சேலத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலரும் சாா்பு நீதிபதியுமான எஸ்.தங்கராஜ் வரவேற்றாா். மோட்டாா் வாகன விபத்து வழக்குகளுக்கான தீா்ப்பாய மாவட்ட சிறப்பு நீதிபதி எம்.தாண்டவன், குற்றவியல் நீதித்துறை நடுவா் ஜெ.கிறிஸ்டல் பபிதா உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றகளின் நீதிபதிகள், வழக்குரைஞா் சங்கத் தலைவா் எம்.முத்துசாமி உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT