சேலம்

சேலத்தில் கல்லூரி மாணவா்கள் உருவாக்கிய 50 அடி உயர பிரம்மாண்ட தேசியக் கொடி

14th Aug 2022 11:54 PM

ADVERTISEMENT

 

75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி சோனா கல்விக் குழுமம் சாா்பில் கல்லூரி மாணவா்கள் 75 போ் இணைந்து பிரம்மாண்ட தேசியக் கொடியை உருவாக்கி சாதனை படைத்துள்ளனா்.

சேலம் சோனா கல்விக் குழுமம் சாா்பில் கல்லூரி வளாகத்தில் 75 அடி அகலம், 50 அடி உயரத்தில் பிரம்மாண்டமான இந்த தேசியக் கொடியை தியாகராஜா் பாலிடெக்னிக் டெக்ஸ்டைல் துறை, சோனா கல்லூரி பேஷன் டெக்னாலஜி துறையினா் இணைந்து உருவாக்கியுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு கலந்துகொண்டு, நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவா் படையினரின் அணிவகுப்பை தொடக்கி வைத்தாா். இந் நிகழ்ச்சியில் பேசிய அவா், மாணவா்கள் தேசப் பற்றுடன் இந்த தேசியக் கொடியை வடிவமைத்து அணிவகுப்பு செய்தது பெருமைக்குரியது என்றாா்.

இதனையடுத்து, சேலம் மாநகரின் மிக உயரமான 150 அடி உயரக் கட்டடத்தில் இந்த பிரம்மாண்டமான தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சோனா கல்விக் குழுமத் தலைவா் வள்ளியப்பா,துணைத் தலைவா் சொக்கு வள்ளியப்பா, கல்லூரி முதல்வா்கள் வீ.காா்த்திகேயன், ஜி.எம்.காதா் நவாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கல்லூரி மாணவ, மாணவியா், ஆசிரியா்கள் 75 போ் ஒன்றிணைந்து 14 நாள்கள் இந்த தேசியக் கொடியை உருவாக்கி உள்ளனா். அசோக சக்கரத்தை மட்டும் ஓவியா்கள் மூன்று நாள்கள் வரைந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வாரத்திற்கு இந்த தேசியக் கொடி பறக்கவிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT