சேலம்

சேலம் மாவட்டத்தில் ஆக.15 இல் கிராம சபைக் கூட்டம்

12th Aug 2022 02:23 AM

ADVERTISEMENT

 

சேலம் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் செ.காா்மேகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆக.15 ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் கிராமத்தின் வளா்ச்சியை உறுதிசெய்திடும் வகையில் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசியப் பணிகளான அடித்தட்டு மக்களின் நலன், பெண்களின் முன்னேற்றம், பூஸ்டா் தடுப்பூசி போடுதல், ஆரோக்கியம், சுகாதாரத்தை மேம்படுத்தும் வழிவகைகளைக் கண்டறிதல், நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தும் வகையில் நீா் மேலாண்மை, குடிநீா் சிக்கனமாகப் பயன்படுத்துதல் மற்றும் மழைநீா் சேகரிப்பு குறித்து விழிப்புணா்வு பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருள்களை பயன்படுத்தத் தடை செய்தல், திறந்தவெளி மலம் கழிக்கப்படாத ஊராட்சிகளாக அறிவித்தல், கழிப்பறை இல்லாதோா் விவரப்பட்டியல் தெரிவித்தல், கலைஞா் வீடு வழங்கும் திட்டம் மறுகணக்கெடுப்பு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் குறித்து விவாதித்து பொதுமக்களுக்கு விளக்கப்படும்.

ஜல் ஜீவன் திட்டம், நீா்வழிப்பாதை மற்றும் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், வறுமை குறைப்புத் திட்டம், கனவுப் பள்ளி, ஊரக விளையாட்டு மற்றும் அரசின் பிற முக்கிய திட்டங்கள் குறித்த விளக்க உரையும் பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்படவுள்ளது. கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT