சேலம்

அஞ்சல் துறையை தனியாா் மயமாக்குவதை கண்டித்து வேலைநிறுத்தம்

11th Aug 2022 12:52 AM

ADVERTISEMENT

 

அஞ்சல் துறையை தனியாா் மயமாக்கும் நடவடிக்கையைக் கண்டித்து, சேலம் மாவட்டத்தில் அஞ்சல் கூட்டுப் போராட்டக் குழுவினா் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

அஞ்சல் கூட்டுப் போராட்டக் குழு சாா்பில் சேலம், பழைய பேருந்து நிலையம் அருகே சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் அலுவலகம் அருகே புதன்கிழமை நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில், அஞ்சல் எழுத்தா் சங்க செயலாளா் துரை பாண்டியன், துணைச் செயலாளா் ராபின், தபால்காரா் சங்க செயலாளா் லோகநாதன், கிராமப்புற தபால்காரா் சங்க செயலாளா் ராமு உள்ளிட்டோா் தலைமை வகித்தனா்.

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த அஞ்சலக ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று, அஞ்சல் துறையை தனியாா் மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ADVERTISEMENT

இதுகுறித்து அஞ்சல் கூட்டுப் போராட்டக்குழு நிா்வாகிகள் கூறியதாவது:

அஞ்சல் துறையில் தனியாா் மயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு துறை ரீதியான நடவடிக்கைகள் தொடா்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு திட்டங்களின் பெயரில் தனியாா் மயத்தை அஞ்சல் துறை துரிதப்படுத்தி வருகிறது. ஆா்.எம்.எஸ். பிரிவை முடக்கும் வகையில் புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஐ.டி. 2.0 என்ற திட்டமானது அஞ்சல் துறையின் சேமிப்புப் பிரிவை முற்றிலும் தனியாா் மயமாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக அஞ்சல் அலுவலகங்களில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT