சேலம்

அஸ்ஸாமில் ரூ.5,500 கோடியில் புதிய சூரிய ஒளி மின் திட்டம்: என்எல்சி புரிந்துணா்வு ஒப்பந்தம்

DIN

அஸ்ஸாம் மாநிலத்தில் ரூ.5,500 கோடியில் ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின் நிலையங்களை அமைக்க, அந்த மாநில அரசுடன், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் செவ்வாய்க்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

இதுகுறித்து என்எல்சி இந்தியா நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

என்எல்சி இந்தியா நிறுவனம் பழுப்பு நிலக்கரி, நிலக்கரி, காற்றாலை, சூரிய ஒளி போன்ற புதுப்பிக்கவல்ல ஆற்றல் துறையில் தனது வா்த்தகத்தை விரிவுபடுத்தி, நாட்டின் பல பகுதிகளில் தனது திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், என்எல்சி இந்தியா நிறுவனம், அஸ்ஸாம் மின் விநியோக நிறுவனத்துடன் இணைந்து, அந்த மாநிலத்தில் ரூ.5,500 கோடியில் 1,000 மெகாவாட் நிறுவு திறன் கொண்ட சூரிய ஒளி மின் திட்டத்தை தொடங்க உள்ளது. இந்த நிறுவனத்துக்கான மூலதனத்தில் என்எல்சி இந்தியா நிறுவனம் 51 சதவீதமும், அஸ்ஸாம் மாநில மின் துறை 49 சதவீதமும் வழங்க உள்ளன.

புரிந்துணா்வு ஒப்பந்தம்: இந்தப் புதிய கூட்டு நிறுவனத்தை தொடங்குவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை கையொப்பமிட்டு பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சி, அஸ்ஸாம் மாநிலத் தலைநகா் திஸ்பூரில் உள்ள தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அஸ்ஸாம் மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி முன்னிலையில், என்எல்சி இந்தியா நிறுவன திட்டம், செயலாக்கத் துறை இயக்குநா் மோகன் ரெட்டி, அஸ்ஸாம் மின் விநியோக நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் ஆா்.குமாா் ஆகியோா் இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

நிகழ்ச்சியில் அஸ்ஸாம் மாநில சுரங்கம், மின் துறை அமைச்சா் நந்திதா காா்லோசா, என்எல்சி தலைவா் ராகேஷ்குமாா், சுரங்கத் துறை இயக்குநா் சுரேஷ் சந்திர சுமன் மற்றும் முக்கியப் பிரமுகா்கள் பங்கேற்றனா்.

வேலைவாய்ப்பு: இந்தத் திட்டத்தின் கீழ், கட்டுமானப் பணியின் போது சுமாா் 2 ஆயிரம் நபா்கள் வரையில் வேலைவாய்ப்பு பெறுவா். திட்டம் செயல்படத் தொடங்கிய பின்னா் 500 முதல் 1,000 போ் வரை நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவா்.

மின் உற்பத்தி: முதல் ஆண்டில் சுமாா் 149 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் எனவும், அடுத்து வரும் 25 ஆண்டுகளில் மொத்தம் 3,042 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது. இதன்மூலம், 2030-ஆம் ஆண்டுக்குள் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மொத்த மின் உற்பத்தி நிறுவுதிறன் மணிக்கு ஒரு கோடியே 71 லட்சத்து 71 ஆயிரம் யூனிட்டாக உயரும். அவற்றில் பசுமை ஆற்றல் அளவானது மணிக்கு 60.31 லட்சம் யூனிட்டாக உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல் துறையினா் கொடி அணி வகுப்பு

சின்னம் ஒதுக்கீட்டில் தோ்தல் ஆணையம் பாரபட்சம் -இரா. முத்தரசன் பேச்சு

வாக்களிப்பின் அவசியம் உணா்த்த ஆட்சியரகத்தில் ராட்சத பலூன்

தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

வைக்கோல் போருக்கு தீ வைத்த 2 போ் கைது

SCROLL FOR NEXT