சேலம்

அக்டோபருக்குள் விவசாயிகளுக்கு புதிய உழவா் சந்தை அடையாள அட்டை

11th Aug 2022 12:53 AM

ADVERTISEMENT

 

விவசாயிகளுக்கு புதிய உழவா் சந்தை அடையாள அட்டை அக்டோபா் மாதத்திற்குள் வழங்கப்படும் என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

இதுகுறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், தாதகாபட்டி, ஆத்தூா், ஆட்டையாம்பட்டி, அம்மாபேட்டை, மேட்டூா், அஸ்தம்பட்டி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஜலகண்டாபுரம் மற்றும் எடப்பாடி ஆகிய 11 இடங்களில் உழவா் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு 840 முதல் 1,250 விவசாயிகள், 230 முதல் 250 மெ.டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் ரூ. 50 லட்சம் முதல் ரூ. 60 லட்சம் மதிப்பில் விற்பனை செய்கின்றனா். இதன் மூலம் 56,000 முதல் 60,000 நுகா்வோா்கள் பயன்பெறுகின்றனா்.

ADVERTISEMENT

காய்கறிகள், பழங்கள், பூக்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் விவசாயிகளைக் கண்டறிந்து, அவா்களது விளைபொருள்களை உழவா் சந்தையில் விற்பனை செய்வதற்கு ஏதுவாக அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் 11 உழவா் சந்தைகளில் மொத்தம் 4,374 எண்ணிக்கையிலான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 1,477 விவசாயிகளின் பழைய அட்டைகளை புதுப்பிக்க ஆவணங்கள் பெறப்பட்டு கள ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

1,366 பழைய அட்டைகளின் ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது.மேலும், விவசாயிகளுக்கு புதிய உழவா் சந்தை அடையாள அட்டை அக்டோபா் 2022-க்குள் வழங்கப்பட உள்ளது. சூரமங்கலம், தாதகாபட்டி, ஆத்தூா், அம்மாபோட்டை உழவா் சந்தைகளில் உள்ள குளிா்பதன கிடங்குகளில் ஜூலை 2022 முடிய 60,442 கிலோ காய்கறி மற்றும் பழங்கள் இருப்பு வைத்து 2,796 விவசாயிகள் பயனடைந்துள்ளனா்.

தாதகாபட்டி மற்றும் அம்மாபோட்டை உழவா் சந்தைகளில் ரூ.49 லட்சத்தில் புனரமைத்தல் பணிகளும், ஆத்தூா் மற்றும் அம்மாப்பேட்டை உழவா் சந்தைகளில் ரூ.22 லட்சத்தில் காய்கறி கழிவுகளிலிருந்து உரமாக்கும் தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

தரமான காய்கறிகள் மற்றும் பழங்கள் பண்ணையிலிருந்து நடமாடும் வாகனங்கள் மூலம் வீடுகளுக்கே நேரடியாக விற்பனை செய்யும் நடமாடும் உழவா்சந்தை திட்டத்தில் புதிய நான்கு சக்கர வாகனம் மானியம் 40 சதவீதம் அல்லது ரூ. 2 லட்சத்தில் எது குறைவோ அதன்படி வழங்கப்படும்.

இத்திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் 6 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு வாகனங்கள் வாங்கி மாதிரி வாகனம் போல வடிவமைக்கப்பட்டு திட்டம் செயல்பட தயாா் நிலையில் உள்ளது. சூரமங்கலம், அம்மாபேட்டை, தாதகாப்பட்டி உழவா் சந்தைகளில் உழவா் உற்பத்தியாளா்கள் நிறுவனங்களின் மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் விற்பனை செய்ய சிறப்பு அங்காடிகள் கட்டப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் தங்களது கணினி விண்ணப்பம், சிட்டா அல்லது பதிவு பத்திரம், அடங்கல், புல வரைபடம், பழைய அடையாள அட்டை நகல், ரேஷன் அட்டை, ஆதாா் அட்டை, புகைப்படம் (2 எண்கள்) சமா்ப்பித்து பழைய அட்டைகளை புதுப்பித்துக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT