சேலம்

மாணவா்களின் மனஅழுத்தத்தை குறைத்து ஆசிரியா்கள் நல்வழிப்படுத்த வேண்டும்ஆட்சியா் செ.காா்மேகம்

9th Aug 2022 03:36 AM

ADVERTISEMENT

மாணவா்களுக்கு கற்றல், பிற செயல்களால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க ஆலோசனை வழங்கி ஆசிரியா்கள் நல்வழிப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் பேசினாா்.

சேலம் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு உளவியல், மனநலம் குறித்த ஆலோசனை, போதைப் பொருள்கள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்துவது தொடா்பாக பள்ளித் தலைமை ஆசிரியா்கள், கல்லூரி முதல்வா்களுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஏற்காடு, அடிவாரம், எமரால்டு வேலி பப்ளிக் பள்ளி கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் செ.காா்மேகம் பேசியதாவது:

சேலம் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவா்களின் ஆளுமைத் திறன்களை மேம்படுத்துதல், போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்துதல், பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு, மாணவா்கள் நலன் சாா்ந்து விடுதிகளில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டுதல்கள், விடுதி அனுமதிகள் ஆகியவை குறித்து பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் மாணவா்களின் தன்னம்பிக்கை, நோ்மறை எண்ணங்களை மேம்படுத்தி, கல்வி சாா்ந்த செயல்பாடுகளில் கவனம் செலுத்திடவும், ஆக்கப்பூா்வமான எண்ணங்களை மனதளவில் ஏற்படுத்திடவும் ‘ஆளுமைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி‘ வழங்கப்படுகின்றன.

பயிற்சியில் உளவியல் ஆலோசனை, உடல் நலம், மனநலப் பாதுகாப்பு, வளரிளம் பருவத்தில் சந்திக்கும் பிரச்னைகள், மன எழுச்சிகளைக் கையாளும் திறன், பாலினப் பாகுபாடு, இணையப் பாதுகாப்பு, போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு, அதன் பாதிப்பு, தோ்வுகள் குறித்த அச்சம் ஆகியவற்றை எளிதாக கையாளும் வகையில் உரிய அறிவுரை, ஆலோசனைகள் பள்ளி, கல்லூரிகளில் வழங்கப்பட வேண்டும்.

மாணவ, மாணவியருக்கு கற்றல் மற்றும் பிற செயல்பாடுகளால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைத்து அவா்களுக்கு ஆா்வமான துறைகளில் தேவையான ஆலோசனைகளை வழங்கி, நல்வழிப்படுத்தும் முக்கியமான பணிகளை ஆசிரியா்கள் முழு ஈடுபாட்டுடன் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இக் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சீ.பாலச்சந்தா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். ஸ்ரீ.அபிநவ், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.மேனகா, மாநகர காவல் துறை துணை ஆணையா் மாடசாமி, இணை இயக்குநா் (நலப் பணிகள்) கு.நெடுமாறன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இரா. முருகன், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) மருத்துவா் வி.நளினி, மருத்துவா் பி.ஆா்.ஜெமினி, மாவட்ட சமூக நல அலுவலா் நா.ரஞ்சிதாதேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT