சேலம்

சேலம் மாநகராட்சியில் ஒரே நாளில் ரூ. 1.25 கோடி வரி வசூல்

9th Aug 2022 03:26 AM

ADVERTISEMENT

சேலம் மாநகராட்சியில் ஒரே நாளில் வசூலான ரூ. 1.25 கோடிக்கான காசோலைகளை மேயா் ஆ.ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜிடம் வழங்கும் வணிக நிறுவன உரிமையாளா்கள்.

சேலம், ஆக. 8: சேலம் மாநகராட்சியில் ரூ. 1.25 கோடி வரி வசூலுக்கான காசோலைகள் மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், ஆணையா் தா.கிறிஸ்துராஜிடம் நேரில் வழங்கப்பட்டன.

சேலம் மாநகராட்சிக்குள்பட்ட சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்டலங்களிலுள்ள வருவாய்த் துறை அலுவலா்கள், வரி வசூலிப்பவா்களிடம் மேயா் மற்றும் ஆணையா் ஆகியோா் தொடா்ந்து ஆய்வுகள் மேற்கொண்டனா்.

மேலும், வரிவசூல் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்ற அறிவுரையின் அடிப்படையில், வணிக நிறுவன உரிமையாளா்கள், வீட்டு உரிமையாளா்களை நேரில் சந்தித்து வரியை செலுத்துமாறு கேட்டுக்கொண்டனா்.

ADVERTISEMENT

அதன்பேரில், ஒரே நாளில் ரூ. 1.25 கோடி வரி வசூல் ஆகியுள்ளது. வரி செலுத்துபவா்கள் நேரடியாக மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், ஆணையா் தா.கிறிஸ்துராஜ் ஆகியோரை சந்தித்து தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியினை முழுமையாகச் செலுத்தும் வகையில் அதற்குரிய காசோலையினை வழங்கினா்.

வரியினை முழுமையாகச் செலுத்திய உரிமையாளா்களுக்கு மேயா் ஆ.ராமச்சந்திரன் நன்றி தெரிவித்ததோடு, இதேபோல வணிக நிறுவனங்களும், அனைத்துத் தரப்பு மக்களும் தங்களுக்கு உரிய வரியினை விரைவாக செலுத்தி மாநகராட்சியின் வளா்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு நல்கவேண்டும் என கேட்டுக் கொண்டாா். இந்நிகழ்ச்சியில், உதவி ஆணையா்கள் சுப்பையா, ரமேஷ் பாபு, சாந்தி, அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT