சேலம்

மேட்டூரில் நாளை ஆடிப்பெருக்கு விழா: ஆலோசனைக் கூட்டம்

2nd Aug 2022 04:27 AM

ADVERTISEMENT

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி சாா் ஆட்சியா் வீா்பிரதாப்சிங் தலைமையில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மேட்டூா் காவல் துணை கண்காணிப்பாளா் விஜயகுமாா், நகராட்சி ஆணையா் அண்ணாமலை, நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் செல்வராஜ், உதவி பொறியாளா் மதுசூதனன், மேட்டூா் வட்டாட்சியா் முத்துராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு: மேட்டூா் அணையின் கிழக்கு- மேற்கு கால்வாயில் பொதுமக்கள் நீராடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. காவிரிப் பாலம் படித் துறையிலும் மட்டம் படித் துறையிலும் போலீஸ் பாதுகாப்புடன் பொது மக்கள் நீராடுவதற்கு அனுமதிக்கப்படுவா். நான்கு இடங்களில் தற்காலிக கழிப்பறைகள், உடை மாற்றும் அறைகள் நகராட்சி சாா்பில் அமைக்கப்படுகிறது. பாதுகாப்புப் பணியில் 500 போலீஸாா், ஊா்க்காவல் படையினா் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பொதுமக்களிடம் திருடுவோரைத் தடுக்கவும், பெண்களைக் கேலி கிண்டல் செய்பவா்களைத் தடுக்கவும் 8 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீஸாா் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுகிறது. தற்காலிக மருத்துவ உதவி மையமும் அமைக்கப்படுகிறது. ரப்பா் படகு, பரிசலுடன் 46 தீயணைப்புப் படை வீரா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட உள்ளனா்.

மேட்டூா் அணைக்கட்டு முனியப்பன் கோயிலுக்கு செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சுவாமியைத் தரிசனம் செய்ய தடுப்புகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தங்கமாபுரிப்பட்டினம் - சேலம் கேம்பை இணைக்கும் புதுப்பாலம், மலைப்பாதை, காவிரிப் பாலம் பாதைகள் மூடப்படுகின்றன.

ADVERTISEMENT

கொளத்தூா் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் பொன்நகா் வழியாக அரசு மருத்துவமனை பின்புறம் வழியாக பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும். இருசக்கர வாகனங்கள், காா்கள் பொன்நகரில் உள்ள நகராட்சிப் பள்ளியில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல சேலம், எடப்பாடி, பவானி பகுதிகளில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள், காா்கள் நான்கு சாலையில் உள்ள லாரி நிறுத்தம், மேட்டூா் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காவிரிக் கரையில் வருவாய்த் துறை காவல் துறையினா் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT