சேலம்

ஊரக வேலை திட்டத்தில் கூலியை உயா்த்தி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

2nd Aug 2022 04:23 AM

ADVERTISEMENT

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை நாள்களை ஆண்டுக்கு 200 நாள்களாக நீட்டிக்கக் கோரியும், கூலி ரூ. 600 உயா்த்தி வழங்க வலியுறுத்தியும் அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம், அகில இந்திய விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வீடு இல்லாத அனைவருக்கும் வீட்டுமனை நிலம் ஒதுக்கி ரூ. 10 லட்சத்தில் வீடு கட்டி வழங்க வேண்டும். ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் விவசாய தொழிலாளா்களுக்கு கூலியை உயா்த்தி வழங்க வேண்டும். விவசாயிகள் உற்பத்தி பொருள்களுக்கு ஆதார விலை வழங்க வேண்டும்.

நில சீா்திருத்த சட்டத்தை செயல்படுத்தி உபரி நிலங்களை நிலமற்ற ஏழைகளுக்கு வழங்க வேண்டும். வன உரிமைச் சட்டத்தை முறையாக அமல்படுத்தி வன மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.

நியாயவிலைக் கடையில் பருப்பு, மளிகைப் பொருள்கள், காய்கறிகள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட தொகுப்பை இலவசமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

ADVERTISEMENT

ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் சேலம் மாவட்டத் தலைவா் வி.தங்கவேல் தலைமை வகித்தாா். சேலம் ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தை சங்கத்தின் மாநிலப் பொருளாளா் எஸ்.சங்கா் துவக்கிவைத்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயற்குழு உறுப்பினா் பி.செல்வசிங், சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. உதயகுமாா், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் ஏ.ராமமூா்த்தி, விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஜி.கணபதி ஆகியோா் பேசினா்.

இதில் சிஐடியு மாநிலக் குழு உறுப்பினா்கள் ஆா்.வெங்கடபதி, ஏ.கோவிந்தன், ஆா்.வைரமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேலம் மாவட்ட துணைத் தலைவா் பி.தங்கவேலு, விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினா் சின்னராஜ், மாா்க்சிஸ்ட் கட்சி சேலம் மாவட்டச் செயலாளா் மேவை.சண்முகராஜா, மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள், மாவட்ட குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம், இந்திய தொழிற்சங்கங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT