சேலம்

ஆட்டோ இயக்க பணம் கேட்டு மிரட்டல்: ஓட்டுநா்கள் தீக்குளிக்க முயற்சி

29th Apr 2022 10:52 PM

ADVERTISEMENT

சேலம் ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலின் முன்பு ஆட்டோ ஓட்டுநா்கள் தீக்குளிக்க முயற்சி செய்தனா்.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் அருகில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆட்டோ நிறுத்தும் இடங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், புதிய பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுநா்கள் அசோக், நாராயணன், பிரபு, வேல்முருகன், இளங்கோவன், மணிகண்டன் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை காலை வந்தனா். பின்னா் திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் புட்டிகளை எடுத்து தங்கள் மேல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனா்.

உடனே, ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், 6 பேரையும் நகர காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT

இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநா்கள் கூறுகையில், சேலம் புதிய பேருந்து நிலைய ஆட்டோ நிறுத்தத்தில், ஆட்டோக்களை நிறுத்த ஒரு சில ஓட்டுநா்கள் ரூ. 10,000 கேட்கின்றனா். இந்தத் தொகையை தராதவா்கள் ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோவை நிறுத்தக் கூடாது என மிரட்டுகின்றனா். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸில் புகாா் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, எங்களை மிரட்டுபவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, வழக்கம் போல ஆட்டோ இயக்க அனுமதிக்க வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT