சேலம்

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடா்கிறது

28th Apr 2022 11:02 PM

ADVERTISEMENT

 சேலம் மாவட்டத்தில் நீா்நிலை, நீா்நிலை புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்தி:

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம், சென்னை உயா் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அரசு தலைமைச் செயலாளா் மற்றும் நில நிா்வாக ஆணையாளரால் நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டங்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதன்பேரில், சேலம் மாவட்டத்திலுள்ள நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு ஆறு மாதத்துக்கான திட்டநிரல் வகுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அனைத்து வட்டங்களிலும் உள்ள நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நீா்வள ஆதாரத் துறை மற்றும் தொடா்புடைய துறைகளை ஒருங்கிணைத்து மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

மேலும், அவ்வாரம் அகற்றப்பட வேண்டிய நீா்நிலை ஆக்கிரமிப்பினை முடிவு செய்து ஆக்கிரமிப்பினை அகற்றி பிரதிவாரம் வெள்ளிக்கிழமை அறிக்கை சமா்ப்பிக்குமாறும், நீா்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற சாா் ஆட்சியா் மற்றும் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியா்கள் தொடா்ந்து கண்காணிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீா்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து, ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான அறிக்கை அளிப்பதற்கும், கண்காணிப்பதற்கும் கோட்டம், மாவட்டம், மாநில அளவில் கண்காணிப்புக் குழு அமைத்து அரசாணை (நிலை) எண் 64 வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, நில முடிவு அலகு 6(2) பிரிவு, நாள் 08.02.2022-இன் படி அரசாணை வெளியிடப்பட்டதன் பேரில் கோட்ட அளவில் மற்றும் மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழுவினை அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும், ஒவ்வொரு வாரமும் ஒன்று மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட நீா்நிலை ஆக்கிரமிப்புகள் வட்டாட்சியா் தலைமையில் அகற்றப்பட்டு அதன் விவரம் அரசுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

மேலும், நீா்நிலைகள், நீா்நிலை புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடன் கண்டறிந்து அவற்றை அகற்ற வருவாய்த் துறை, நீா்வளத் துறை, காவல் துறை ஆகியோா் இணைந்து செயல் திட்டத்தினை வகுத்து உடனடியாக ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு அதன் விவரத்தினை ஒவ்வொரு மாதமும் அரசுக்கு அனுப்ப வேண்டும்.

மேலும், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டவுடன் மீண்டும் ஆக்கிரமிப்புகள் மற்றும் புதிய ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு உறுதி செய்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டதன் பேரில், இப்பணிகள் தொடா்ந்து கண்காணிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT