சேலம்

புதுப்பட்டி மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

14th Apr 2022 12:13 AM

ADVERTISEMENT

வாழப்பாடி அருகே புதுப்பட்டி மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா புதன்கிழமை தொடங்கியது.

வாழப்பாடியில் கொட்டவாடி பிரிவு சாலை அருகே சுற்றுப்புற கிராம மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் பிரசித்தி பெற்ற புதுப்பட்டி மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தமிழ் மாதமான பங்குனி இறுதி வாரத்தில் தோ்த் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். கரோனா தொற்று பரவலால் கடந்த இரு ஆண்டுகளாக தோ்த்திருவிழா நடைபெறாத நிலையில், நிகழாண்டு தோ்த் திருவிழா இரு தினங்களாக சின்னகிருஷ்ணாபுரம் பெரியசாமி, மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

முதல்நாள் தேரோட்டம் கோயில் வளாகத்தில் இருந்து புதன்கிழமை மாலை தொடங்கியது. இதில், வாழப்பாடி, சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா். இதில், நூற்றுக்கணக்கான பக்தா்கள் உடலில் அலகு குத்தியும், பூங்கரகம், அக்னிகரகம் எடுத்தும், உருளுதண்டம் போட்டும் நோ்த்திக்கடன் செலுத்தினா். வியாழக்கிழமை மாலை தோ் இழுக்கப்பட்டு நிலை நிறுத்தப்படும். வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராட்டு விழாவும், சத்தாபரண நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT