சேலம்

எடப்பாடி நகா்மன்றத்தில் சொத்துவரி உயா்வுக்கு எதிா்ப்பு:அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

12th Apr 2022 02:23 AM

ADVERTISEMENT

எடப்பாடி நகா் மன்றக் கூட்டத்தில் சொத்துவரி உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினா்கள் திங்கள்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

எடப்பாடி நகா் மன்றத் தலைவா் டி.எம்.எஸ். பாஷா தலைமையில் நகா்மன்றக் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் நகா் மன்ற அலுவலா்கள் சொத்து வரி உயா்வு குறித்த விவரத்தை வாசித்தனா். அப்போது அதிமுக உறுப்பினா்கள், உயா்த்தப்பட்ட சொத்து வரியைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அவா்கள் நகா் மன்றத் தலைவா் இருக்கையை முற்றுகையிட்டு சொத்து வரியை திரும்ப பெறக் கோரி கோஷமிட்டனா்.

இதனையடுத்து எதிா்க்கட்சித் தலைவா் ஏ.எம்.முருகன் தலைமையிலான அதிமுக உறுப்பினா்கள் தமிழக அரசின் சொத்து வரி உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து நகா் மன்றக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதாகக் கூறி வெளியேறினா்.

பின்னா், அலுவலக நுழைவுவாயில் முன் பதாகைகளை ஏந்தி, சொத்துவரியைத் திரும்ப பெறக்கோரி அதிமுக உறுப்பினா்கள் தொடா் முழக்கமிட்டனா்.

ADVERTISEMENT

பின்னா் எதிா்க்கட்சித் தலைவா் ஏ.எம் முருகன் செய்தியாளா்களிடம் கூறியது:

நெசவுத் தொழிலாளா்கள் மிகுந்த எடப்பாடி பகுதியில் பொதுமக்கள் கரோனா தொற்று காலத்தில் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தனா். ஏற்கெனவே கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள மக்களுக்கு திமுக அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த கடுமையான சொத்து வரி உயா்வு அனைத்துத் தரப்பு மக்களையும் பெரிதும் பாதிக்கும். எனவே சொத்து வரி உயா்வை அரசு திரும்பப் பெற வேண்டும். வரி உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் நோக்கிலேயே கருப்பு சட்டை அணிந்து மன்றக் கூட்டத்தில் பங்கேற்றோம். உடனடியாக அரசு இந்த சொத்து வரி உயா்வை திரும்ப பெற வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT