சேலம்

வாழப்பாடியில் ஒரு விலங்கு பட சம்பவம்? கயறு கட்டி எலும்புக்கூடாகக் கிடந்த உடல்

2nd Apr 2022 01:37 PM

ADVERTISEMENT

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், இஸ்லாமியரது மயானத்தில் எலும்புக்கூடாக அழுகிக் கிடந்த மனித உடலைக் கைப்பற்றி  வாழப்பாடி காவல்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் .

வாழப்பாடி பேரூராட்சி பெரியசாமி நகர் பகுதியில் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான மயானம் (கபர்ஸ்தான்) உள்ளது.  கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக  இப்பகுதியில் யாரும் செல்லவில்லை.

இந்நிலையில், சனிக்கிழமை காலை, இந்த மயானத்தில் புதர்களை அப்புறப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது ‌ கயிற்றில் சுற்றி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், புதருக்குள் ஒரு மனித உடல் கிடப்பதை பார்த்துள்ளனர்.

இதுகுறித்து வாழப்பாடி காவல்த்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த காவல்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது இந்த உடல் ஆணா? பெண்ணா? என கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அழுகிய நிலையில் கிடப்பது தெரியவந்தது. 

ADVERTISEMENT

இந்த உடலை கைப்பற்றிய காவல்த்துறையினர், தடய அறிவியல் துறை காவல்த்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தடய அறிவியல் துறை ஆய்வுக்கு பிறகே கொலையுண்டவர் ஆணா?  பெண்ணா?  என்பது உள்ளிட்ட தகவல்கள் தெரியவரும்.

மேலும் இப்பகுதியில் கிடைத்துள்ள தடயங்களை கைப்பற்றி காவல்த்துறையினர், கொலையுண்டவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழப்பாடியில் கைகள் கட்டி கொலை செய்து மயானத்தில் வீசப்பட்ட அழுகிய நிலையில் கிடந்த மனித உடல் மீட்கப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT